டெல்லி ஆசாத்பூர் சந்தையில் வியாபாரிகளுடன் ராகுல் காந்தி! கண்ணீர் மல்கப் பேசிய வியாபாரி!
Delhi Azadpur market traders visit Rahul Gandhi
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லி ஆசாத்பூர் சந்தைக்கு சென்றுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் ராகுல் காந்தி வியாபாரிகளிடம் காய்கறிகளின் விலையை கேட்டறிவது பதிவாகியுள்ளது.
ராகுல் காந்தி கடந்த சனிக்கிழமை தனது சமூக வலைதளபக்கத்தில் ஆசாத்பூர் சந்தையில் கண்ணீர் மல்கப் பேசிய காய்கறி வியாபாரி ஒருவரின் வீடியோவைப் பகிர்ந்தார்.
அதில் காய்கறி வியாபாரி ராமேஷ்வர் என்பவர் தெரிவித்திருப்பது, "தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தக்காளியை வாங்கி என்னால் விற்பனை செய்ய முடியவில்லை.

அப்படியே வாங்கினாலும் என்ன விலையில் விற்பது என்பதும் தெரியாமல், தக்காளியை சிலர் இருப்பு வைத்துள்ளனர். இதனால் அது அழுகிப்போகவும் வாய்ப்புள்ளதால் நஷ்டம் ஏற்பட்டு என் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு ரூ.200 சம்பாதிப்பதே கடினமாக இருக்கிறது" என்று அவர் கண்ணீர் மல்கப் பேசியுள்ளது பதிவாகியிருந்தது. இந்நிலையில், இன்று ராகுல் காந்தி ஆசாத்பூர் மாண்டிக்குச் சென்று வியாபாரிகளுடன் கலந்துரையாடினார்.
கடந்த மே மாதம் ராகுல் காந்தி திங்கள்கிழமை லாரி ஓட்டுநர்களுடன் ராகுல் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த வீடியோவைப் பகிர்ந்த காங்கிரஸ் கட்சி, "ராகுல் காந்தி லாரி ஓட்டுநர்களுடன் பயணித்து, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். அவர் லாரியில் டெல்லியில் இருந்து சண்டிகருக்கு பயணம் செய்தார்.
ஊடகங்களின் தகவலின் படி, சுமார் 9 லட்சம் லாரி ஓட்டுனர்கள் இந்திய சாலைகளில் பயணித்தபடி இருக்கின்றனர். அவர்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன. அதனால் ராகுல் காந்தி, ஓட்டுனர்கள் மனதின் குரலை கேட்கும் வேலையை செய்தார்" என்று தெரிவித்திருந்தது.
English Summary
Delhi Azadpur market traders visit Rahul Gandhi