'முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்'; அமெரிக்க அதிபர் ட்ரம்பை கோழை என விமர்சித்துள்ள கொலம்பியா அதிபர்..!
Colombian president challenges Trump saying Arrest me if you can
முடிந்தால் என்னை கைது செய்யுங்கள், உங்களுக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன் என்று கொலம்பியா அதிபர் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு சவால் விடுத்துள்ளார்.
கடந்த வாரம் தென் அமெரிக்க நாடான வெனிசுலாவுக்குள் அதிரடியாக நுழைந்த அமெரிக்க சிறப்பு படையினர், அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை நள்ளிரவில் கைது செய்தது. பின்னர் அமெரிக்கா அழைத்து சென்று நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் கைதுக்கு காரணம் என போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும், அமெரிக்காவுக்குள் போதை பொருள்களை கடத்துவதற்கு ஆதரவாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து அந்நாட்டின் துணை அதிபரான டெல்சி ரோட்ரிக்ஸ் முறைப்படி இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.

மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை மார்ச் 17-ஆம் தேதி வரை சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அவர்கள் புரூக்ளினில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் இந்த கைது நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அறைகூவல் விடுத்துள்ளார். அதாவது, 'என்னை அழைத்துச் செல்லுங்கள், கைது செய்யுங்கள் உங்களுக்காக நான் இங்கே காத்திருக்கிறேன். டிரம்ப், நீங்கள் ஒரு கோழை. அவர்கள் குண்டு வீசினால் இங்குள்ளோர் கொரில்லாக்களாக மாறுவார்கள். நான் மீண்டும் ஆயுதத்தை தொடமாட்டேன் என்று சபதம் செய்துள்ளேன். ஆனால், தாய்நாட்டுக்காக நான் மீண்டும் ஆயுதம் ஏந்துவேன்.'என்று கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சவால் விடுத்துள்ளார்.
English Summary
Colombian president challenges Trump saying Arrest me if you can