மேற்குவங்கத்தில் அக்டோபர் 16-ஆம் தேதி இடைத்தேர்தல்; ராஜினாமா செய்த நடிகை கோயல் மல்லிக்கிற்கு பாஜகவில் சீட்..?
By election on October 16 for the Rajya Sabha seat in West Bengal vacated by actress Koel Mallick
மேற்குவங்க மாநிலத்தில் நடிகை கோயல் மல்லிக் ராஜினாமா செய்த ராஜ்யசபா காலிப் பணியிடத்திற்கு அக்டோபர் 16-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா எம்பியாகப் பிரபல நடிகை கோயல் மல்லிக் (44), பதவியேற்றார். யாரும் எதிர்பாராத வகையில் கடந்த ஜூலை 16-ஆம் தேதி தனது எம்பி பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து மாநில பாஜக தேர்தல் மேலிடப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பூபேந்தர் யாதவைச் சந்தித்து அவர் பேசியது மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.
இந்நிலையில், அந்த காலி இடத்திற்கு வரும் அக்டோபர் 16-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது;
இதற்கு முன்னதாக திரிணாமுல் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் ஐக்கியமான சுகேந்து சேகர் ராய், சுஷ்மிதா தேவ், பிரகாஷ் சிக் பராய்க் ஆகிய 03 பேருக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டு, கடந்த ஜூலை 09-ஆம் தேதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட ஃபார்முலாவைப் பின்பற்றி, கோயல் மல்லிக்கும் பாஜக சார்பில் போட்டியின்றி ராஜ்யசபாவுக்கு அனுப்பப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

இருப்பினும், 'கட்சிக்குள் நீண்டகாலமாக உழைத்த உண்மை விசுவாசிகளை ஒதுக்கிவிட்டு, மாற்றுக்கட்சியிலிருந்து வருபவர்களுக்கு மீண்டும் சீட் தருவதா?' என மேற்குவங்க மாநில பாஜக நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.
கடந்த மே 04-ஆம் தேதி அன்று, வெளியான சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரசின் 80 எம்எல்ஏக்களில் பெரும்பாலானோர் அதிருப்திக் குழுவுக்கு ஆதரவளித்ததும், அக்கட்சியின் 28 மக்களவை எம்பிக்களில் 20 பேர் என்சிபிஐ கட்சியில் இணைந்ததும் மம்தா பானர்ஜிக்குக் கடும் பின்னடை ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், மேற்குவங்கத்தின் மொத்தமுள்ள 16 ராஜ்யசபா இடங்களில் திரிணாமுல் பலம் 13 என்பதிலிருந்து 09 ஆகக் குறைந்துள்ளது. இந்தச் சூழலில் பதவிக்காக அணி மாறியவர்களை 'கொள்கையற்ற பச்சோந்திகள்' என மம்தாவின் தீவிர ஆதரவாளர் குணால் கோஷ் சாடியுள்ளார். கோயல் மல்லிக்கின் வேட்புமனு குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் தேப்ஜித் சர்க்கார் தெரிவித்துள்ளார்.
English Summary
By election on October 16 for the Rajya Sabha seat in West Bengal vacated by actress Koel Mallick