மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் அதிரடி திருப்புமுனை: உத்தவ் தாக்கரே கூட்டத்தைப் புறக்கணித்த 6 சிவசேனா எம்பிக்கள்
Another Twist in Maharashtra Politics 6 Uddhav Sena MPs Boycott Crucial Meeting Amid Defection Rumors
மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் ஒரு பெரிய உட்கட்சிப் பிளவு ஏற்படுவதற்கான அறிகுறிகள் மிகத் தீவிரமாகத் தென்படத் தொடங்கியுள்ளன. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் கூட்டத்தை அக்கட்சியின் ஆறு எம்பிக்கள் அதிரடியாகப் புறக்கணித்துள்ளனர். உத்தவ் தாக்கரே தரப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் தனிக் குழுவாகப் பிரிந்து, அம்மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிகாரப்பூர்வ சிவசேனா கட்சியில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் சூழலில் இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புது தில்லியில் நடைபெற்ற இந்த முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் எம்பிக்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று உத்தவ் தரப்பு கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தார். இருப்பினும், கட்சியில் உள்ள மொத்தம் ஒன்பது மக்களவை உறுப்பினர்களில் அனில் தேசாய், அரவிந்த் சாவந்த் மற்றும் ராஜாபாவ் வாஜே ஆகிய மூன்று பேர் மட்டுமே இந்த கூட்டத்தில் நேரில் கலந்து கொண்டனர். கொறடாவின் உத்தரவை மீறி கூட்டத்தைப் புறக்கணித்த மற்ற ஆறு எம்பிக்களுக்கும் விளக்கம் கேட்டு முறைப்படி நோட்டீஸ் அனுப்ப கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. மேலும், கொறடா உத்தரவை மீறியதற்காக அவர்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, அதிருப்தி எம்பிக்கள் கட்சி மாறுவதற்காக தலா ஐம்பது கோடி ரூபாய் வரை லஞ்சம் பேசப்பட்டுள்ளதாகச் சிவசேனா உத்தவ் அணியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் புதன்கிழமை கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி முதன்முறையாக இரண்டாகப் பிளவுற்றது. அப்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் பிரிந்து சென்று பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தனர். பின்னர் தேர்தல் ஆணையத்தால் உண்மையான சிவசேனை அங்கீகாரமும் வில் அம்பு சின்னமும் ஷிண்டே அணிக்கு வழங்கப்பட்டது.
அதன்பின் நடைபெற்ற 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணியில் போட்டியிட்ட உத்தவ் தாக்கரேவின் கட்சி ஒன்பது இடங்களைக் கைப்பற்றி அரசியல் ரீதியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. ஆனால், தற்போது அந்த ஒன்பது எம்பிக்களில் ஏழு பேர் அதிருப்தியாளர்களாக மாறியுள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் உத்தவ் கட்சியிலிருந்து முழுமையாக விடுபட்டு ஷிண்டே அணியில் தங்களை இணைத்துக் கொள்வதற்காகத் தில்லியில் முகாமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த புதிய அரசியல் நகர்வு உத்தவ் தாக்கரேவிற்கு நாடாளுமன்ற அளவில் மீண்டும் ஒரு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
English Summary
Another Twist in Maharashtra Politics 6 Uddhav Sena MPs Boycott Crucial Meeting Amid Defection Rumors