சட்டவிரோத சுரங்க முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் உள்பட 04 பேருக்கு, 07 ஆண்டு சிறை தண்டனை..!
04 people including a former Karnataka minister have been sentenced to 07 years in prison in the illegal mining scam case
ஓபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் பாஜகவை சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான ஜனார்த்தன் ரெட்டி மற்றும் மூன்று பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் கலி ஜனார்த்தன் ரெட்டி. தற்போது எம்.எல்.ஏ., ஆக உள்ளார். சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன் ரெட்டிக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜனார்த்தன் ரெட்டிக்கு சொந்தமானது ஒபுலாபுரம் சுரங்க நிறுவனம். பிரிக்கப்படாத ஆந்திராவின் முதல்வராக ஓய்எஸ் ராஜசேகர ரெட்டி இருந்த போது, 68.5 எக்டேர் மற்றும் 39.5 எக்டேர் இரும்பு தாது சுரங்க குத்தகைகக்கு விடுவதில் ஜனார்த்தன் ரெட்டி நிறுவனத்திற்கு அதிகாரிகள் சாதகமாக செயல்பட்டதாகவும், மற்றவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
விசாரணையில் ஜனார்த்தன் ரெட்டி மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் விதிகளை மீறி செயல்பட்டதும், பாதுகாக்கப்பட்ட வன நிலங்களில் தாதுக்களை வெட்டி எடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ.884.13 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பாக ஐதராபாத்தின் நம்பள்ளியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இதன் போது 3,400 ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. 219 சாட்சிகளிடம் விசாரணை நடந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் ஜனார்த்தன் ரெட்டி உள்ளிட்ட 04 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பவழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கு 07 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, இந்த வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் கரிபந்தம், ஸ்ரீலட்சுமி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
English Summary
04 people including a former Karnataka minister have been sentenced to 07 years in prison in the illegal mining scam case