தென்காசியில் முன்னாள் டிஜிபி வீட்டில் சிறுவனை கட்டிப்போட்டு முகமூடி அணிந்த நபர்கள் கொள்ளை: போலீசார் அதிர்ச்சி..!
Masked men rob former DGPs house in Tenkasi tying up boy
ஓய்வு பெற்ற தமிழக போலீஸ் முன்னாள் டி.ஜி.பி., ராஜேந்திரனின் பூர்வீக வீட்டில் சிறுவனை கட்டிப்போட்டு முகமூடி கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி புளியங்குடி பஸ் ஸ்டாண்ட் அருகே, டிஜிபி ராஜேந்திரனின் பூர்வீக வீடு உள்ளது. அதில் அவரது உறவினர் அமிர்தராஜ் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அங்கு அவரது மனைவி ராஜேஸ்வரி, மகள் ரேகாவுடன் தனது சொந்த ஊரான விஸ்வநாதபேரிக்கு பெற்றோரை பார்ப்பதற்காக சென்றிருந்த நிலையில், அமிர்தராஜ் வேலைக்காக வெளியே சென்றிருந்துள்ளார். அவரது மகனான 14 வயதுடைய பூவேந்திர பொன்ராஜ் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில், இன்று பகல் 03:00 மணியளவில், முகமூடி அணிந்த இருவர், வீட்டு பின்வாசல் கதவை திறந்து உள்ளே நுழைந்து சிறுவனை மிரட்டி, கைகளை துண்டால் கட்டி போட்டு, வாயில் துணியை திணித்தும் கூச்சலிடாமல் இருக்க செய்தனர். அதன் பின்னர் பீரோ சாவியை தரக் கூறி மிரட்டியதால் பயந்த சிறுவன் சாவியை கொடுத்துள்ளான்.
அதனை தொடர்ந்து, சிறுவனின் முகத்தில் முகமூடி கொள்ளையர்கள் ஏதோ திரவத்தை தெளித்து அவனை மயக்கமடைய வைத்துள்ளனர். பின்னர், இரண்டு பீரோக்களையும் திறந்து, ஒன்றில் இருந்த ரூ.33,500 மற்றும் மற்றொன்றில் இருந்த ரூ.18,000, சில பட்டு சேலைகளையும் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

வீடு திரும்பிய ராஜேஸ்வரி, மகனை கட்டிப்போட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே கணவருக்கு தகவல் தெரிவித்த தோடு, புளியங்குடி இன்ஸ்பெக்டர் சியாம்சுந்தர் தலைமையில் போலீசார் விவிசாரணை நடத்தியுள்ளனர்.
அத்துடன், சிசிடிவி காட்சிகள் மற்றும் சாலையோர கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விரல் ரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது இருவர் முகமூடி அணிந்து வந்ததாகவும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை கணக்கிட்டு திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவம் நடந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தென்காசி புளியங்குடி பஸ் ஸ்டாண்ட் அருகே, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இந்த கொள்ளை நடந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Masked men rob former DGPs house in Tenkasi tying up boy