'பெரிய கோவில்களில் திருப்பதி கோவிலில் உள்ளது போன்று தேவஸ்தானங்கள் அமைப்பது குறித்து யோசிக்க வேண்டும்': சென்னை உயர் நீதிமன்றம்..!
High Court says that we should consider setting up temples to maintain big temples
ரூ.06 கோடி ரூபாய் செலவில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் கோபுரம் முன்பு வணிக வளாகம் கட்ட 2023-ம் ஆண்டு அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான மனுக்களில், ராஜகோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டுவது கோவிலின் விழாக்களுக்கு இடையூறாக அமையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், கோவில் முன்பு வணிக வளாகம் கட்டும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்னதாக அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று மீண்டும் வந்தது. அப்போது, வணிக வளாகத்திற்கான கட்டுமானங்களை மேற்கொள்ளப்போவதில்லை என அறநிலையத்துறை ஏற்கனவே உத்தரவாதம் அளித்திருந்த நிலையில், ராஜகோபுரம் முன்பு பக்தர்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கான மாற்றுத் திட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அறநிலையத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்டு 02 வார காலம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், அண்ணாமலையார் கோவிலில் இருந்து வெகு தொலைவில் அரசு புறம்போக்கு நிலங்கள் இருக்கிறதா? என்பதை கண்டறிந்து அங்கு வணிக வளாகம் கட்டலாம் என்று தெரிவித்தனர். அதே சமயம், கோவிலுக்கு அருகில் கோவில் நிலமாக இருந்தாலும், அங்கு எந்த கட்டுமானமும் கட்டுவதற்கு அனுமதி அளிக்க முடியாது என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களை பராமரிக்கவும், பக்தர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தவும் திருப்பதி கோவிலில் இருப்பதைப் போல் தேவஸ்தானங்கள் அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், இந்த வழக்கின் விசாரணையை வரும் செப்டம்பர் 07-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
High Court says that we should consider setting up temples to maintain big temples