எபோலா அச்சுறுத்தல்: திருச்சி அரசு மருத்துவமனையில் அதிரடியாக அமைக்கப்பட்ட 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு...!
Ebola threat 10 bed special ward set up at Trichy Government Hospital
காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் நாடுகளில் வேகமாக பரவி வரும் எபோலா வைரஸ் தொற்று உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அவசர அறிவுறுத்தலின்படி, நாட்டின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் சிறப்பு மருத்துவ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காய்ச்சல், கடும் சோர்வு, தலைவலி, தசை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, காரணமற்ற ரத்தக்கசிவு மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் காணப்படும் நபர்களை உடனடியாக அரசு மருத்துவமனைகளில் உள்ள தனிமைப்படுத்தல் பிரிவில் 21 நாட்கள் கண்காணிப்பில் வைத்து சிகிச்சையளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் எபோலா தொற்று அறிகுறிகள் இருப்பதை கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பு தனிமைப்படுத்தல் வார்டு தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொரோனா பரவல் காலத்தில் தனிமைப்படுத்தல் மையமாக செயல்பட்ட மருத்துவமனை பின்புற கட்டிடத்தில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 5 படுக்கைகள் என மொத்தம் 10 படுக்கைகளுடன் கூடிய நவீன வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அடங்கிய தனிக்குழு முழு தயார் நிலையில் காத்திருக்கிறது.மேலும், 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்பு மையமாக இந்த வார்டு இயங்கும் வகையில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Ebola threat 10 bed special ward set up at Trichy Government Hospital