அடிக்கடி தலைவலி வருகிறதா...? சாதாரணம் என்று அலட்சியம் வேண்டாம்...! - உடல் தரும் எச்சரிக்கை சமிக்ஞையாகவும் இருக்கலாம்...!
Do you often get headaches Dont ignore it normal It could warning signal from your body
பொதுவான உடல்நலப் பிரச்சினைகளில் தலைவலி முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. பெரும்பாலான தலைவலிகள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்றாலும், வாரத்திற்கு பல முறை அல்லது ஒரு மாதத்தில் 10 முதல் 15 நாட்களுக்கும் அதிகமாக தொடர்ந்து தலைவலி ஏற்பட்டால், அதன் அடிப்படைக் காரணத்தை கண்டறிவது மிகவும் அவசியமாகிறது. மூளை நேரடியாக வலியை உணருவதில்லை. மாறாக, மூளையைச் சுற்றியுள்ள ரத்த நாளங்கள், நரம்புகள், தசைகள் மற்றும் திசுக்களில் ஏற்படும் மாற்றங்களே தலைவலியாக உணரப்படுகின்றன. எனவே, தொடர்ந்து ஏற்படும் தலைவலியை சாதாரண உடல்நலக் குறைபாடாகக் கருதி புறக்கணிக்கக் கூடாது.
அடிக்கடி தலைவலி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் முதன்மையானது மைக்ரேன் ஆகும். இது சாதாரண தலைவலி அல்ல; நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒரு நீண்டகால மருத்துவ நிலையாகும். தலையின் ஒரு பக்கத்தில் துடிப்பு போன்ற கடுமையான வலி, குமட்டல், வாந்தி, வெளிச்சம் மற்றும் சத்தத்தைத் தாங்க முடியாத நிலை, சிலருக்கு கண்முன் மின்னல் போன்ற ஒளிக்கீற்றுகள் தோன்றுதல் போன்ற அறிகுறிகள் காணப்படலாம். இந்த வலி நான்கு மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை நீடிக்கக்கூடும்.

அடுத்ததாக அதிகம் காணப்படுவது மனஅழுத்த தலைவலி ஆகும். அதிக வேலைப்பளு, மன உளைச்சல், போதிய தூக்கமின்மை மற்றும் தொடர்ச்சியான பதற்றம் போன்ற காரணங்களால் இந்த வகை தலைவலி ஏற்படுகிறது. தலையை இறுக்கமாக கட்டியிருப்பது போன்ற உணர்வு, கழுத்து மற்றும் தோள்பட்டைப் பகுதியில் வலி, லேசானது முதல் மிதமான அளவிலான தலைவலி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.
மிகவும் கடுமையான வலியை ஏற்படுத்தும் வகையாக கொத்து தலைவலி கருதப்படுகிறது. இதில் ஒரு கண் பகுதியைச் சுற்றி தாங்க முடியாத அளவுக்கு வலி ஏற்படும். கண்களில் நீர் வடிதல், மூக்கு அடைப்பு அல்லது மூக்கில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகளும் இணைந்து காணப்படும். குறிப்பிட்ட காலங்களில் தினமும் ஒரே நேரத்தில் இந்த வலி தோன்றுவது இதன் தனிச்சிறப்பாகும்.
சைனஸ் தலைவலி சளி, ஒவ்வாமை அல்லது சைனஸ் தொற்றுகளால் ஏற்படுகிறது. நெற்றி மற்றும் கன்ன எலும்புப் பகுதியில் அழுத்தம் போன்ற உணர்வு, மூக்கு அடைப்பு, முகவலி மற்றும் காய்ச்சல் ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும்.
வாழ்க்கை முறையிலும் பல காரணிகள் தலைவலியைத் தூண்டுகின்றன. போதிய தூக்கமின்மை, உடலில் நீர்ச்சத்து குறைபாடு, உணவு வேளைகளைத் தவிர்த்தல், அதிக மனஅழுத்தம், நீண்ட நேரம் செல்பேசி அல்லது கணினித் திரையைப் பயன்படுத்துதல், அதிகளவில் காபி அல்லது தேநீர் அருந்துதல், மது அருந்துதல், புகைப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை போன்றவை தலைவலி அடிக்கடி ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாகக் கருதப்படுகின்றன.
பெண்களிடம் தலைவலி, குறிப்பாக மைக்ரேன், ஆண்களைவிட அதிகமாகக் காணப்படுகிறது. இதற்கு உடலில் ஏற்படும் ஈஸ்ட்ரஜன் ஹார்மோனின் மாற்றங்களே முக்கிய காரணமாகும். மாதவிடாய் காலம், கர்ப்பகாலம், மாதவிலக்கு பருவம் மற்றும் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும் காலங்களில் மைக்ரேன் தாக்கம் அதிகரிக்கக்கூடும்.
சில அறிகுறிகள் உயிருக்கு ஆபத்தான நிலைகளை எச்சரிக்கும் அறிகுறிகளாக இருக்கலாம். வாழ்நாளிலேயே இல்லாத அளவுக்கு திடீரென கடுமையான தலைவலி தோன்றுதல், தலைவலியுடன் கை அல்லது கால் பலவீனம் ஏற்படுதல், பேசுவதில் சிரமம், பார்வை மங்குதல் அல்லது இரட்டைப் பார்வை, அதிக காய்ச்சலுடன் கழுத்து இறுக்கமாக இருப்பது, தலைக்காயத்திற்குப் பிறகு தொடங்கும் தலைவலி, வலிப்பு அல்லது 50 வயதுக்கு மேல் புதிதாக ஆரம்பிக்கும் தலைவலி போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இத்தகைய அறிகுறிகள் மூளையில் ரத்தக்கசிவு, பக்கவாதம், மூளைக் கட்டி அல்லது தீவிர தொற்றுநோய்களின் ஆரம்ப எச்சரிக்கையாக இருக்கலாம்.
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரண மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக்கொள்வது, மருந்துகளின் அளவுக்கு மீறிய பயன்பாட்டால் உருவாகும் புதிய வகை தலைவலிக்கு காரணமாக அமையலாம். எனவே, சுயமாக மருந்துகளை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்.
தலைவலியைத் தடுப்பதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும். தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை நிம்மதியான தூக்கம் பெறுதல், இரண்டு முக்கால் முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்துதல், உணவு வேளைகளை தவறவிடாமல் சாப்பிடுதல், தினமும் குறைந்தது முப்பது நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்தல், மனஅழுத்தத்தைக் குறைக்க யோகா, தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்ளுதல், நீண்ட நேரம் மின்னணு திரைகளைப் பயன்படுத்தும் போது இடைவெளி எடுத்துக்கொள்ளுதல் போன்றவை தலைவலியைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. மேலும், தலைவலி எப்போது ஏற்படுகிறது, எவ்வளவு நேரம் நீடிக்கிறது, எந்த உணவுக்குப் பிறகு அதிகரிக்கிறது போன்ற விவரங்களை தினசரி பதிவு செய்து வைத்தால், காரணத்தைக் கண்டறிவதற்கும் தகுந்த சிகிச்சையைத் தேர்வு செய்வதற்கும் உதவியாக இருக்கும்.
அடிக்கடி ஏற்படும் தலைவலியை சாதாரண வலியாகக் கருதி அலட்சியப்படுத்தக் கூடாது. அது மனஅழுத்தம் போன்ற எளிய காரணங்களால் தோன்றியிருக்கலாம்; அதே நேரத்தில் உயிருக்கு ஆபத்தான நோய்களின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, தொடர்ந்து தலைவலி ஏற்பட்டால் சுயமருத்துவத்தைத் தவிர்த்து, தகுதியான மருத்துவரை அணுகி முழுமையான பரிசோதனை மேற்கொண்டு, காரணத்திற்கேற்ப சிகிச்சை பெறுவதே பாதுகாப்பான மற்றும் சிறந்த அணுகுமுறையாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Do you often get headaches Dont ignore it normal It could warning signal from your body