நீட் மறுதேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு! தேர்வு எழுதப் போகும் சிட்டி விவரம் விரைவில்...NTA 'ரீஃபண்ட்' செய்ய கூடுதல் நேரம்...!
Attention NEET re exam takers Details city where you taking exam announced soon NTA extra time refund
மே 3-ந் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு, வினாத்தாள் கசிவு சர்ச்சையால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பான சூழ்நிலையை தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்டதுடன், மறுதேர்வு வருகிற ஜூன் 21-ந் தேதி நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.வினாத்தாள் கசிவு விவகாரம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் குழப்பத்தையும் உருவாக்கிய நிலையில், தேர்வின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் மறுதேர்வு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஏற்கெனவே தேர்வுக்காக மாணவர்கள் செலுத்தியிருந்த கட்டணம் முழுமையாக திருப்பி வழங்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மறுதேர்வில் பங்கேற்க மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜூன் 21-ந் தேதி நடைபெறவுள்ள நீட் மறுதேர்வுக்கான ‘சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப்’ மற்றும் ஹால் டிக்கெட் விரைவில் வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் எந்த நகரில் தேர்வு எழுத வேண்டும் என்பதைக் குறிப்பிடும் ‘சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப்’ மே 31-ந் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்கள் neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று, முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ள ‘Advance City Intimation Link’ பகுதியை தேர்வு செய்து, தங்களது உள்நுழைவு விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் தேர்வு நகர விவரங்களை சரிபார்த்து, அந்த படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதேபோல், நீட் மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜூன் 14-ந் தேதிக்குள் வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. அந்த ஹால் டிக்கெட்டில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தின் பெயர், முகவரி உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
இந்த முறை நீட் மறுதேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் தேர்வுக்கான காலஅளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, ரத்து செய்யப்பட்ட தேர்வுக்கான கட்டணத்தை திருப்பி வழங்கும் நடைமுறையையும் தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது.
மாணவர்கள் தங்களது வங்கி கணக்கு விவரங்களை ஜூன் 22-ந் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள ‘ரீஃபண்ட்’ தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை சுமார் 13 லட்சம் மாணவர்கள் தங்களது வங்கி விவரங்களை புதுப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 3-ந் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.நீட் மறுதேர்வு தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகளை மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Attention NEET re exam takers Details city where you taking exam announced soon NTA extra time refund