நெல்லையில் வெடித்த நீட் எதிர்ப்புப் போராட்டம்...! - வீரியமாகப் போராடிய மாணவர்களைக் கூண்டோடு தூக்கிய காவலத்துறை...!
Anti NEET protest breaks out Nellai Police drag students who protested vigorously cages
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவலர்கள் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்ற சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட 12 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், சிலரை காவலர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்றும், நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி மந்திரி பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி, டெல்லி ஜந்தர்மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டங்களில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையிலும் மாணவர்கள் திரண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில், நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்டச் செயலாளர் ஷைலேஷ் அருள்ராஜ் தலைமையில் நேற்று காலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு காவலர்கள் அனுமதி வழங்காததால், மாணவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
ஆனால், மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்ததுடன், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, மாணவர்களை காவலர்கள் தடுக்க முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவலர்கள் கைது செய்யத் தொடங்கினர். சில மாணவர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கிச் செல்லப்பட்டதாகவும், சிலரை சாலையில் இழுத்துச் சென்று காவல்துறை வாகனங்களில் ஏற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 12 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் வண்ணார்பேட்டை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
English Summary
Anti NEET protest breaks out Nellai Police drag students who protested vigorously cages