சாலையைக் கடந்தபோது பயங்கரம...வாகனம் மோதி தொழிலாளி பரிதாப பலி...! - காவலர்கள் அதிரடி விசாரணை...!
Worker tragically dies after being hit by vehicle while crossing road Police launch investigation
தூத்துக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற மரம் வெட்டும் தொழிலாளி மீது அதிவேகமாக வந்த மர்ம வாகனம் மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் ஆனந்தமடம் பச்சேரி தெற்கு தெருவைச் சேர்ந்த பழனியின் மகன் மாடசாமி (55), மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று இரவு சுமார் 11 மணியளவில், மாடசாமி மற்றும் அவருடன் பணிபுரிந்த இரு தொழிலாளர்கள் வெட்டப்பட்ட மரக்கட்டைகளை டாடா ஏசி சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணம் மேற்கொண்டிருந்தனர்.அப்போது, குறுக்குச்சாலை சாமி பல்க் அருகே சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திய அவர்கள், அருகிலிருந்த உணவகத்திற்கு சென்று உணவருந்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் மீண்டும் தங்களது வாகனம் நின்றிருந்த இடத்திற்குச் செல்ல மாடசாமி சாலையை கடக்க முயன்றுள்ளார்.அந்த சமயத்தில், தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மாடசாமி மீது பயங்கரமாக மோதியது.
தாக்கத்தின் வேகத்தில் அவர் பல அடிகள் தூரம் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் படுகாயமடைந்த மாடசாமியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அவசரமாக அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் சிகிச்சை பலனின்றி மாடசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் காவலர்கள் நிலையம் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய மர்ம வாகனத்தையும் அதன் ஓட்டுநரையும் கண்டுபிடிக்கும் பணியில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Worker tragically dies after being hit by vehicle while crossing road Police launch investigation