வனிதா மகள் ஜோவிகாவின் ‘அகதா’ டீசர் வெளியீடு!பயமுறுத்தும் தோற்றத்தில் கவனம் ஈர்த்த பிக் பாஸ் பிரபலம்!
Vanitha daughter Jovica Agatha teaser released The Bigg Boss celebrity attracted attention with her scary look
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்ற ஜோவிகா விஜயகுமார், தற்போது நடிகையாக தனது அடுத்த கட்ட பயணத்தை தொடங்கியுள்ளார். நடிகை வனிதா விஜயகுமாரின் மகளும், நடிகர்கள் விஜயகுமார்–மஞ்சுளா தம்பதியரின் பேத்தியும் ஆன ஜோவிகா, இயக்குநர் எம்.எஸ். ராஜு இயக்கும் ‘அகதா’ திரைப்படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கனமழையில் தீவிரமான பார்வையுடன் ஜோவிகா தோன்றிய அந்த போஸ்டர், படத்தின் மர்மமும் இருண்ட தன்மையும் வெளிப்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ‘அகதா’ டீசர், ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டீசரில் ஜோவிகா பேய் போன்ற தோற்றத்தில் கத்தும் காட்சி சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. அவரது நடிப்பில் வெளிப்பட்டுள்ள தீவிரமும், பயமுறுத்தும் வெளிப்பாடும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஜோவிகா இதற்கு முன்பு தமிழில் பார்த்திபன் இயக்கிய ‘டீன்ஸ்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதேபோல் அந்தப் படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது. மேலும், தாயார் வனிதா விஜயகுமார் இயக்கிய ‘மிஸஸ் & மிஸ்டர்’ படத்தின் தயாரிப்பிலும் பங்கெடுத்திருந்தார்.
இப்போது முழுமையான நடிகையாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் ஜோவிகாவுக்கு ‘அகதா’ முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.
இந்தப் படம் வனிதா விஜயகுமார் குடும்பத்துடனும் ஒரு சிறப்பு தொடர்பை கொண்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு, இயக்குநர் எம்.எஸ். ராஜு, வனிதாவை தனது ‘தேவி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியிருந்தார். தற்போது அவரது மகள் ஜோவிகாவையும் அதே இயக்குநர் அறிமுகப்படுத்துவது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இரண்டு தலைமுறைகளை ஒரே இயக்குநர் அறிமுகப்படுத்துவது அரிதான நிகழ்வாக கருதப்படுகிறது. அதேசமயம், தனது பாட்டி மஞ்சுளாவின் கலை மரபை ஜோவிகா தொடர்கிறார் என்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘அகதா’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. படப்பிடிப்பு சுமார் 85 நாட்களில் நிறைவடைந்துள்ளதாகவும், இதில் 45 நிமிடங்களுக்கு மேல் விஷுவல் எஃபெக்ட்ஸ் இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படம், விரைவில் திரைக்கு வர உள்ளது. ஜோவிகாவின் முதல் முழுநீள கதாபாத்திரம் ரசிகர்களிடையே எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்பது தற்போது எதிர்பார்ப்பாக உள்ளது.
English Summary
Vanitha daughter Jovica Agatha teaser released The Bigg Boss celebrity attracted attention with her scary look