திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த்- ரசிகர்கள் சுற்றி வளைத்ததால் பரபரப்பு!!
Rajinikanth who had darshan of Sami in Tiruvannamalai fans surrounded him, causing excitement
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் நடிகர் ரஜினிகாந்த் மீது அதீத பக்தி கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே கிரிவலப் பாதையில் மின்விளக்கு வசதி செய்து கொடுத்திருந்தார்.
அதனை தொடர்ந்து ராஜ கோபுரங்கள் மீது அதிக வெளிச்சம் கொண்ட மின்விளக்குகள் பொருத்த நிதி அளித்தார். 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதைகளிலும் நடிகர் ரஜினி கிரிவலம் சென்று தரிசனம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை பகுதியில் நடந்து வருகிறது. இதற்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரஜினி திருவண்ணாமலை வந்தார்.
அவர் அங்குள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தங்கி உள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்றார். அம்மணி அம்மன் கோபுரம் முன்பு இறங்கியதும் கோபுரத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி வணங்கினார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. முதலில் அவர் தங்க கொடிமரம் அருகே உள்ள சம்பந்த விநாயகரை தரிசனம் செய்தார். அதன் பின்னர் அண்ணாமலையார் சன்னதிக்கு சென்றார். அங்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. அதில் கலந்து கொண்டு மனமுருக தரிசனம் செய்தார். தொடர்ந்து அம்மன் சன்னதிக்கு சென்று அங்கு தரிசனம் செய்தார்.
இதற்கிடையே ரஜினிகாந்த் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்த தகவல் திருவண்ணாமலை நகர பகுதியில் பரவியதால் சற்று நேரத்தில் கோவிலுக்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டம் அதிகரித்ததால் உடனடியாக அங்கிருந்து ரஜினி வெளியேறினார்.
சனி பிரதோஷத்தையொட்டி நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இன்றுடன் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை பகுதியில் நிறைவடைகிறது. அவர் இன்று மாலை சென்னைக்கு புறப்பட்டு செல்வர் என தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Rajinikanth who had darshan of Sami in Tiruvannamalai fans surrounded him, causing excitement