KPY பாலாவின் அடுத்த படம் ‘ரீமேட்ச்! பேட்மிண்டனை மையமாகக் கொண்ட முதல் தமிழ் படம்!
KPY Bala next film is Rematch The first Tamil film centered on badminton
இந்திய சினிமாவில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு ஏராளமான திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றான பேட்மிண்டனை மையமாகக் கொண்டு முழுநீள திரைப்படங்கள் அரிதாகவே உருவாகியுள்ளன. அந்தக் குறையை போக்கும் வகையில், தமிழ் சினிமாவில் முதல் முறையாக பேட்மிண்டனை மையமாகக் கொண்டு உருவாகும் விளையாட்டு மற்றும் காதல் கலந்த திரைப்படமாக ‘ரீமேட்ச்’ தயாராகி வருகிறது.
இந்தப் படத்தில் பிரபல நகைச்சுவை நடிகரும், சமூக சேவகருமான KPY பாலா கதாநாயகனாக நடிக்கிறார். ‘கலக்கப் போவது யாரு?’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா, பல கதைகளை கேட்ட பிறகு இந்தத் திரைப்படத்தை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம், அவருக்கு பேட்மிண்டன் விளையாட்டுடன் இருக்கும் தனிப்பட்ட தொடர்புதான். பள்ளி பருவம் முதலே தீவிரமாக பேட்மிண்டன் விளையாடி வந்த பாலா, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று மூன்றாம் இடம் பெற்ற அனுபவமும் கொண்டவர். அதனால், படத்தின் கதை மற்றும் விளையாட்டு பின்னணி அவரை மிகவும் கவர்ந்ததாக கூறப்படுகிறது.
‘ரீமேட்ச்’ திரைப்படத்தின் மூலம் தானு ஹர்ஷா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இளவரசு, சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ஷா ரா, சஷாங்க், சித்ரா லட்சுமணன், செல் முருகன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் படத்தை BOFTA திரைப்படக் கல்லூரியின் திரைக்கதை மற்றும் இயக்கப் பிரிவில் விருது பெற்ற மாணவரும், ‘காற்றின் மொழி’, ‘பொம்மை’ உள்ளிட்ட படங்களில் இயக்குநர் ராதாமோகனின் இணை இயக்குநராக பணியாற்றிய ஆர். விமல் குமார் இயக்குகிறார். இவரே படத்தின் கதையையும் எழுதியுள்ளார்.
படப்பிடிப்பு தொடக்கம் முதல் முடிவு வரை ஒரே கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 2026 அக்டோபருக்குள் முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு, காதல், உணர்வுகள் மற்றும் இன்றைய தலைமுறையின் உறவுகளை இணைத்து உருவாகும் ‘ரீமேட்ச்’, பேட்மிண்டன் விளையாட்டின் வேகம், சவால் மற்றும் உணர்வுகளை பெரிய திரையில் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவமாக வழங்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
English Summary
KPY Bala next film is Rematch The first Tamil film centered on badminton