சென்சார் சர்ச்சையில் சிக்கிய ‘ஜனநாயகன்’: ரிலீஸ் தள்ளிவைப்பால் 100 கோடி ரூபாய் நஷ்டம் – பிரபலம் ஓபன் டாக்..
Jananayakan caught in censor controversy Rs 100 crore loss due to release postponement Celebrity Open Talk
ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம், சென்சார் பிரச்னை காரணமாக பொங்கல் ரிலீஸிலிருந்து தள்ளிப்போனது. தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், விரைவில் தனி நீதிபதி விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் வெளியாகாதது விஜய் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விஜயின் அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை திருவிழா போலக் கொண்டாட ரசிகர்கள் தயாராக இருந்தனர். மேலும், இது விஜயின் கடைசி திரைப்படமாக இருக்கலாம் என்ற பேச்சு இருந்ததால், படத்தின் ரிலீஸுக்காக அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக செய்யப்பட்டிருந்தன. ஆனால் சென்சார் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட திடீர் தடையால், அந்த எதிர்பார்ப்பு அனைத்தும் முறியடிக்கப்பட்டது.
படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான சில காட்சிகள் இருப்பதாக ஒரு சென்சார் அதிகாரி ஆட்சேபனை தெரிவித்ததைத் தொடர்ந்து, படத்துக்கு சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டது. இதனை சரி செய்ய படக்குழு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும், சென்சார் தரப்பு உறுதியான நிலைப்பாட்டில் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனம், விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றது.
முதலில் வழக்கை விசாரித்த தனி நீதிபதி, படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால் மேல்முறையீட்டில் சென்சார் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று, பின்னர் மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சமீபத்திய விசாரணையில் சாதகமான தீர்ப்பு வரும் என எதிர்பார்த்த தயாரிப்பு நிறுவனத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், மீண்டும் இந்த வழக்கை தனி நீதிபதி விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பால் படக்குழு மேலும் அப்செட்டான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. வழக்கு விசாரணை எப்போது நடைபெறும் என்ற தெளிவில்லாத சூழலில், வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு மீண்டும் சென்சாரிடம் செல்ல தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த நீதிமன்ற விசாரணையில், கேவிஎன் நிறுவனம் வழக்கை வாபஸ் பெறும் எண்ணத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ் ஆகாததால் ஏற்பட்டுள்ள நஷ்டம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. தனியார் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வழங்கும் நிபுணர் ரமேஷ் பாலா, “ஜனநாயகன் படம் வெளியாகாததால், தமிழ் சினிமா பாக்ஸ் ஆஃபிஸில் சுமார் 100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “ஜனவரியில் வெளியான ‘பராசக்தி’ படம் தமிழ்நாட்டில் 55 கோடி ரூபாய் வசூலித்தது. ‘ஜனநாயகன்’ வெளியாகியிருந்தால், அது எளிதாக 150 முதல் 200 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கும். ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இந்த இரண்டு படங்களின் மூலம் கடந்த ஜனவரியில் தமிழ்நாட்டில் மொத்தமாக 85 கோடி ரூபாய் மட்டுமே வசூல் ஆனது. ‘ஜனநாயகன்’ வராதது தான் இந்த பெரிய இழப்புக்கு காரணம்” என்றார்.
மொத்தத்தில், ஒரு பெரிய நட்சத்திரப் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது, ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ் சினிமா தொழிலுக்கும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Jananayakan caught in censor controversy Rs 100 crore loss due to release postponement Celebrity Open Talk