‘லீடர்’ அரசியல் படமா? முழுக்க கமர்ஷியல் ஆக்ஷன் படமா?பட்டுனு போட்டு உடைத்த லெஜெண்ட் சரவணன்!
Is Leader a political film Is it a purely commercial action film Legend Saravanan broke the mold
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் லீடர் படத்தின் டைட்டில் டீசர் வெளியீட்டு விழா இன்று, பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய படத்தின் நாயகன் லெஜெண்ட் சரவணன், ‘லீடர்’ படம் குறித்த பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், “படத்தின் டைட்டிலை பார்த்ததும் இது அரசியல் படம் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் இந்த படத்தில் ஒரு காட்சியோ, ஒரு வசனமோ கூட அரசியல் சார்ந்தது இல்லை. ‘லீடர்’ முழுக்க ஒரு சிறப்பான ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது” என்று தெளிவுபடுத்தினார். தற்போதைய காலத்தில் ரசிகர்கள் கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய படங்களையோ அல்லது சமூகத்திற்கு நல்ல கருத்து சொல்லும் படங்களையோ எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
‘லீடர்’ படத்தைப் பொறுத்தவரை, முழுக்க கமர்ஷியல் அம்சங்களோடு, அதே நேரத்தில் சமூகத்திற்கு நல்ல செய்தியை சொல்லும் வகையில் திரைக்கதை மிகவும் கவனமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், இயக்குநர் துரை செந்தில்குமாரின் அணுகுமுறையை லெஜெண்ட் சரவணன் பாராட்டினார். இந்த படம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
படத்தின் அப்டேட்கள் குறித்தும் அவர் அறிவித்தார். ‘லீடர்’ படத்தின் முதல் பாடல் வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் என்றும், மார்ச் 6ஆம் தேதி படத்தின் டிரைலர் வெளியாகும் என்றும் தெரிவித்தார். மேலும், ஏப்ரல் மாதத்தில் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு தீவிரமாக பணியாற்றி வருவதாகவும் கூறினார். இதற்கு முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
தனது தனிப்பட்ட கனவுகளை பகிர்ந்த லெஜெண்ட் சரவணன், “சிறுவயதில் இருந்தே நடிகர் ஆக வேண்டும் என்பது என் ஆசை. என் வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜில் ஒரு பக்கம் ஷாரூக் கான், மறுபக்கம் சல்மான் கான் படங்களை ஒட்டி வைத்திருப்பேன். ஒருநாள் நானும் நடிகராகுவேன் என்று அம்மாவிடம் சொன்னால் அவர் சிரிப்பார்” என்று நினைவுகூர்ந்தார்.
மேலும், தற்போதைய சினிமா துறையின் நிலை குறித்து பேசிய அவர், “இன்றைக்கு சினிமா துறை ஒரு சரிவை சந்தித்து வருகிறது. ஒரு படம் வெற்றி பெறுகிறது என்றால் அது ஒரே ஒரு நபரின் வெற்றி அல்ல. அது ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பின் வெற்றி. சினிமா துறை மீண்டு வர அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்” என்று தெரிவித்தார்.
‘லீடர்’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீட்டு விழா, படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.
English Summary
Is Leader a political film Is it a purely commercial action film Legend Saravanan broke the mold