உப்பு: சுவையா? சுகாதார ஆபத்தா? அளவு சொல்லும் அறிகுறிகள்...?
Salt flavor enhancer or health hazard What symptoms tell us about quantity consumed
உப்பு என்பது வெறும் சுவைக்காக சேர்க்கப்படும் பொருள் மட்டும் அல்ல; அது உடலின் அடிப்படை தாது சத்துகளில் ஒன்றாகும். உடலில் உப்பு அளவு குறைந்தால் தலைவலி, வாந்தி உணர்வு, சோர்வு, தசை பிடிப்பு, மன குழப்பம், வலிப்பு, கோமா நிலை போன்ற கடுமையான பிரச்சினைகள் தோன்றலாம்.
குறிப்பாக மூளைச் செல்கள் முதலில் பாதிக்கப்படும்.பண்டைய காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் உப்பளங்களில் தயாரிக்கப்படும் கல் உப்பும் கடல் உப்பும் பயன்படுத்தி வந்தனர்.

கடல் உப்பில் உள்ள சோடியம் குளோரைடு, உடலின் நீர் சமநிலையையும் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் அதிக சுத்திகரிப்பு செய்யப்படாததால், இதில் பொட்டாசியம், கால்சியம், இரும்பு போன்ற சிறு தாதுக்களும் காணப்படுகின்றன.
இருப்பினும் அவற்றின் பலனைப் பெற அதிக உப்பு எடுத்துக் கொள்வது ஆரோக்கியமல்ல; அவை பிற உணவுகளிலிருந்தே பெறப்பட வேண்டும்.சோடியம் உடலில் நீர்ச்சத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
அது குறைந்தாலும், அதிகமானாலும் ரத்த அழுத்தத்தில் மாற்றங்கள் ஏற்படும். அதேபோல் குளோரைடு வயிற்றில் அமில சுரப்பை தூண்டி செரிமானத்தை மேம்படுத்துகிறது. அதனால் அளவான உப்பு உணவு செரிமானத்திற்கு உதவிகரமாகும்.
கடல் உப்பில் உள்ள மக்னீசியம் காரணமாக உப்பு கலந்த நீரில் குளிப்பது சரும வறட்சி, வீக்கம் போன்றவற்றை குறைக்க உதவுகிறது. ஆனால், அதிக உப்பு உட்கொள்வது உயர் ரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரக கோளாறு போன்ற தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால் சிப்ஸ், ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகள், நொறுக்குத்தீனிகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
உயர் ரத்த அழுத்தம் அல்லது இதய, சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்கள் தினசரி எவ்வளவு உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை மருத்துவரின் ஆலோசனைப்படி தீர்மானிக்க வேண்டும். “அதிக உப்பு அமைதியாகக் கொல்லும்” என்பதற்கு காரணம் இதுவே.இன்றைய காலத்தில் அயோடின் சேர்க்கப்பட்ட உப்பு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
இது தைராய்டு ஹார்மோன் செயல்பாட்டை சீராக வைத்திருக்கவும், அயோடின் குறைபாட்டைத் தவிர்க்கவும், குழந்தைகளின் மூளை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. ஆனால் குறைந்த அயோடின் உணவு பரிந்துரைக்கப்பட்டவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.
வயதானவர்கள் ஒரு நாளைக்கு 2,300 மி.கி.க்கு குறைவான சோடியம் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்; 1,500 மி.கி. அளவு மிகச் சிறந்தது. இது சுமார் ஒரு டீஸ்பூன் உப்புக்கு சமம். ஆனால் நாம் தினசரி உண்ணும் தயாரிப்புப் பொருட்கள் மற்றும் பாக்கெட் உணவுகளில் மறைந்து கிடக்கும் உப்பு அளவு அதிகம்.ஆகையால் வீட்டில் சமைத்து, அளவோடு உப்பு சேர்த்து உண்பதே ஆரோக்கியமான வாழ்க்கையின் ரகசியம்.
English Summary
Salt flavor enhancer or health hazard What symptoms tell us about quantity consumed