வாழை இலை விருந்தின் சூப்பர் ஸ்டார்: கல்யாண வீட்டு ஸ்டைல் அவியல் இனி உங்கள் வீட்டிலும்..! செய்வது எப்படி...?
Banana leaf Wedding home style Avial is now available at your home too How to make it
திருமண விருந்தில் வாழை இலையில் பரிமாறப்படும் உணவுகளில் அவியலுக்குத் தனி இடம் உண்டு. பலவிதமான காய்கறிகளுடன் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், தயிர் சேர்ந்து தரும் மணமும் சுவையும் அனைவரையும் கவரும். சரியான பக்குவத்தில் செய்தால், திருமண வீட்டில் கிடைக்கும் அதே சுவையான அவியலை வீட்டிலும் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் – 1
முருங்கைக்காய் – 1
உருளைக்கிழங்கு – 1
கேரட் – 1
பீன்ஸ் – 150 கிராம்
வெள்ளைப் பூசணிக்காய் – 150 கிராம்
வாழைக்காய் – 1
சேனைக்கிழங்கு – 150 கிராம்
துருவிய தேங்காய் – 1 கப்
பச்சை மிளகாய் – 4 அல்லது 5
சீரகம் – 1 தேக்கரண்டி
தயிர் – 1 கப்
கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை
1. காய்கறிகளை நறுக்குதல்
அனைத்துக் காய்கறிகளையும் கழுவி, நீளவாக்கில் ஒரே அளவில் நறுக்கிக்கொள்ளவும். முருங்கைக்காயைத் தனியாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
2. காய்கறிகளை வேகவைத்தல்
மற்ற காய்கறிகளை அழுத்தக் கலனில் சேர்த்து உப்பு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும். மஞ்சள் தூள் சேர்க்க வேண்டாம். காய்கறிகள் குழையாமல் பார்த்துக்கொள்ளவும்.
3. தேங்காய் விழுது தயாரித்தல்
தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக்கொள்ளவும்.
4. அவியலைக் கொதிக்கவைத்தல்
வாணலியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி, அரைத்த விழுதைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். பின்னர் வேகவைத்த காய்கறிகளையும் முருங்கைக்காயையும் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். கலவை கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.
5. தாளித்து முடித்தல்
தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து அவியலில் கலக்கவும். சிறிது ஆறியதும் தயிரைச் சேர்த்து மெதுவாகக் கிளறவும்.
இப்போது மணம் கமழும் கல்யாண வீட்டு அவியல் தயார்!
சுவை கூட சில குறிப்புகள்: காய்கறிகளை ஒரே அளவில் நறுக்கவும்; தண்ணீரை அதிகமாகச் சேர்க்க வேண்டாம். தேங்காய் எண்ணெய் அவியலுக்கு மணத்தைக் கூட்டும். தயிரை இறுதியில் சேர்ப்பதால் அதன் சுவை மாறாமல் இருக்கும். சூடான சாதத்துடன் பரிமாறினால் சுவை அள்ளும்!
English Summary
Banana leaf Wedding home style Avial is now available at your home too How to make it