புழல் சிறை கைதிகள் தப்பிச் சென்ற விவகாரத்தில் அதிரடி...! அலட்சியமாக இருந்த 7 பேர் பணியிடை நீக்கம்...! - Seithipunal
Seithipunal


சென்னை புழல் சிறையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி ஆறு சிறைக் காவலர்கள் மற்றும் ஓர் உதவி சிறை அலுவலர் என மொத்தம் ஏழு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னை புழல் சிறையில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகளும், ஆயிரத்துக்கும் அதிகமான தண்டனைக் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பெண்கள் சிறையில் 150-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மூன்றடுக்கு அமைப்புடன் கூடிய சிறை வளாகத்தில் உயரமான மதில் சுவர்களும் மின்வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன.இத்தகைய பாதுகாப்பு வசதிகள் நிறைந்த சிறையில் இருந்து இரண்டு கைதிகள் அடுத்தடுத்து தப்பிச் சென்றது சிறைத்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புழல் சிறையில் நேபாள நாட்டைச் சேர்ந்த சுதீப் (23) என்பவர் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.

சென்னை பாடி பகுதியில் தங்கியிருந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கடந்த மாதம் ஜெ.ஜெ. நகர் காவலர்களால் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை உணவு அருந்துவதற்காக மற்ற கைதிகள் வந்தபோது சுதீப் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறைக் காவலர்கள், அவர் அடைக்கப்பட்டிருந்த அறையில் தேடிப் பார்த்தனர். அங்கும் அவர் இல்லாததால் அதிர்ச்சியடைந்தனர்.

பல்வேறு இடங்களில் தேடியும் சுதீப்பைக் கண்டுபிடிக்க முடியாததால், அவர் காணாமல் போனது குறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து ஆய்வாளர் வசந்த ராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார்.சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (26) என்பவர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று மதிய உணவு இடைவேளையின்போது சுரேஷும் உணவு அருந்த வரவில்லை. அவர் இருந்த அறையில் சோதனை செய்தபோதும் காணவில்லை. இதையடுத்து சிறை வளாகம் முழுவதும் தேடுதல் நடத்தப்பட்டது. ஆனால், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.இதுகுறித்தும் புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஒரே சிறையில் அடுத்தடுத்து இரண்டு கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தப்பிச் சென்ற இரண்டு கைதிகளையும் பிடிப்பதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், நேபாளத்தைச் சேர்ந்த சுதீப் சென்னையின் திருமங்கலம் பகுதியில் சுற்றித்திரிந்தபோது காவலர்களால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். தப்பியோடிய மற்றொரு கைதியான சுரேஷைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இரண்டு கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் சென்ற விவகாரம் தொடர்பாகச் சிறைத்துறை நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பணியில் அலட்சியமாகச் செயல்பட்டதாகத் தெரிவித்து, ஆறு சிறைக் காவலர்கள் மற்றும் ஓர் உதவி சிறை அலுவலர் என மொத்தம் ஏழு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறைத்துறை தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் இந்த நடவடிக்கைக்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக உள்ளதாகக் கருதப்படும் புழல் சிறையில் கைதிகள் தப்பிய சம்பவம், சிறை நிர்வாகத்தின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Action taken Puzhal Prison prisoner escape case 7 negligent people dismissed


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->