மெகா ஹிட் படத்திற்கே சம்பளம் வாங்க மறுத்த இசைஞானி இளையராஜா! ஏன் தெரியுமா?
Musician Ilayaraja refused to take salary for the mega hit film Do you know why
திரையுலகில் வெற்றி என்பது பெரும்பாலும் வசூல், புகழ், சம்பளம் ஆகியவற்றால் அளவிடப்படுகிறது. ஆனால் அந்த அளவுகோல்களைக் கடந்து, கலைக்கும் மனசாட்சிக்கும் முதன்மை கொடுத்த ஒரு அபூர்வ சம்பவம், இசைஞானி இளையராஜாவை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டுகிறது. ஒரே மெகா ஹிட் திரைப்படத்திற்காக 16 மணி நேரம் இடைவிடாமல் உழைத்தும், அந்தப் படத்திற்கான சம்பளத்தை வாங்க மறுத்தவர் அவர்.
அந்த வரலாற்றுச் சம்பவம் நிகழ்ந்தது ‘முதல் மரியாதை’ திரைப்படத்தின் போது. இயக்குநர் பாரதிராஜா தனது ஆருயிர் நண்பரான இளையராஜாவுக்கு படத்தின் இறுதிப் பிரதியைக் காட்டியபோது, இசைஞானிக்கு ஒரு கலைஞனாக முழு திருப்தி ஏற்படவில்லை. சில காட்சிகள் எடுத்த விதம் குறித்து அவர் வெளிப்படையாகவே தனது விமர்சனத்தை தெரிவித்தார். நண்பத்துக்காக அல்ல, ஒரு தரமான படைப்பு வர வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே அந்த கருத்துகள் கூறப்பட்டன.
ஆனால், அந்த மாற்றங்கள் செய்யப்படாமல் படம் பின்னணி இசைக்காக அனுப்பப்பட்டது. இதனால் இளையராஜா கோபப்படவில்லை. மாறாக, “படம் எனக்குப் பிடிக்காவிட்டாலும், கமிட் செய்த வேலையை முழு நேர்மையுடன் சிறப்பாகச் செய்ய வேண்டும்” என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தார். குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக அவர் தொடர்ச்சியாக 16 மணி நேரம் உழைத்து பின்னணி இசையை உருவாக்கினார். தன்னால் ரசிக்க முடியாத காட்சியாக இருந்தாலும், திரையில் பார்ப்பவர்களின் மனதை கலங்க வைக்க வேண்டும் என்ற ஒரே இலக்குடன் அவர் இசை அமைத்தார்.
படம் வெளியான பிறகு, ‘முதல் மரியாதை’ பட்டிதொட்டியெங்கும் வெற்றி பெற்றது. வசூலில் சாதனை படைத்த அந்தத் திரைப்படம், காலத்தால் அழியாத கிளாசிக்காகவும் மாறியது. ஆனால் அந்த வெற்றிக்குப் பிறகும், இளையராஜா தனது சம்பளத்தைப் பெற மறுத்துவிட்டார். அதற்கான காரணமாக, “இந்தப் படம் எனக்குப் பிடிக்கவில்லை என்ற உணர்வோடுதான் இதற்கு இசை அமைத்தேன். பிடிக்காமல் செய்த ஒரு வேலைக்குச் சம்பளம் வாங்குவது என் கலைக்கும் என் மனசாட்சிக்கும் விரோதமானது” என்று அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நெகிழ்ச்சியான தகவலை, அந்தப் படத்தில் பணியாற்றிய சித்ரா லட்சுமணன் பலமுறை பதிவு செய்துள்ளார். பணம் இரண்டாம் பட்சம்; தான் செய்யும் தொழிலுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற பண்பே இளையராஜாவை உயர்ந்த கலைஞனாக நிலைநிறுத்துகிறது. பின்னணி இசை மற்றும் ஒலியின் நுணுக்கங்களை ஆழமாக அறிந்தவர் என்று டி.வி. கோபாலகிருஷ்ணன் போன்ற ஜாம்பவான்களாலும் பாராட்டப்பட்டவர் அவர்.
எத்தனை உயரங்களைத் தொட்டாலும், இன்றும் அதிகாலையில் ஸ்டுடியோவுக்குச் சென்று இசையில் மூழ்கும் அவரது பழக்கம், இசையின் மீது அவருக்குள்ள தீராத தாகத்தை வெளிப்படுத்துகிறது. ‘முதல் மரியாதை’ படத்தில் வெளிப்பட்ட அந்த நேர்மையும், பணத்தைப் பொருட்படுத்தாத கலைஞன் மனமும் தான், இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் அவரை ‘இசைஞானி’யாக சிம்மாசனத்தில் அமர வைத்திருக்கிறது.
English Summary
Musician Ilayaraja refused to take salary for the mega hit film Do you know why