MGR மனைவிக்கு நான்தான் முறைப்பையன்.. நானும் எம்.ஜி.ஆரும் சகலை..நடிகர் ரமேஷ் கண்ணா ஓபன் டாக்!
I am the one complaining to MGR wife MGR and I are friends Actor Ramesh Khanna opens up
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், கதாசிரியர், திரைக்கதை ஆசிரியர் என பல முகங்களுடன் இயங்கி வரும் ரமேஷ் கண்ணா, சமீபத்திய பேட்டி ஒன்றில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தொடர்பான குடும்ப உறவை வெளிப்படுத்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாருடன் நீண்ட கால நட்பு கொண்ட ரமேஷ் கண்ணா, அவரது பல படங்களில் இணை இயக்குநராகவும் நடிகராகவும் பணியாற்றியவர்.
அந்த பேட்டியில் ரமேஷ் கண்ணா பேசுகையில், மறைந்த நடிகையும் எம்.ஜி.ஆரின் மனைவியுமான ஜானகி தனது அத்தை மகள் என்றும், தனக்கு முறைப்பெண் என்றும் கூறினார். ஜானகியின் மகனை தனது தங்கை திருமணம் செய்துள்ளதாகவும், இதனால் குடும்ப உறவு மேலும் நெருக்கமானதாக இருந்ததாகவும் தெரிவித்தார். “நான் திருமணம் செய்ய வேண்டிய பெண்ணை எம்.ஜி.ஆர் திருமணம் செய்து கொண்டார். அதனால் நானும் எம்.ஜி.ஆரும் சகலை உறவு. ஆனால் வயது வித்தியாசம் அதிகம் என்பதால் எல்லாம் சிரிப்பாகவே முடிந்தது” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
மேலும், எம்.ஜி.ஆர் – ஜானகி திருமணத்துக்கு ஆரம்பத்தில் தனது தந்தை சம்மதிக்கவில்லை என்றும், அந்த திருமணத்திற்கு எதிராக வழக்கு தொடுத்து, 14 ஆண்டுகள் அவர்கள் கணவன்–மனைவியாக வாழக் கூடாது என நீதிமன்ற உத்தரவு பெற்றதாகவும் கூறினார். இருப்பினும், சட்ட ரீதியாக 1962க்கு பிறகே அவர்களது திருமணம் அங்கீகரிக்கப்பட்டது என்றும் விளக்கினார்.
ஜானகியை இளம் வயதிலேயே கும்பகோணத்திலிருந்து அழைத்து வந்து நடனம், நடிப்பு கற்றுக் கொடுத்து ஒரு நடிகையாக உருவாக்கியவர் தனது தந்தை தான் என்றும், இதனை எம்.ஜி.ஆர் தனது “நான் ஏன் பிறந்தேன்” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் ரமேஷ் கண்ணா தெரிவித்தார். அந்த புத்தகத்தில் “கார்டியன்” என்று எம்.ஜி.ஆர் குறிப்பிடுவது தனது தந்தையையே என்றும், ஜானகியை திருமணம் செய்ய பெண் கேட்டு வந்த போது நடந்த சம்பவங்களையும் எம்.ஜி.ஆர் அதில் பதிவு செய்துள்ளதாக கூறினார்.
ரமேஷ் கண்ணாவின் இந்த வெளிப்பாடுகள், எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகி வாழ்க்கை குறித்து அறியாத பல தகவல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததாக ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
English Summary
I am the one complaining to MGR wife MGR and I are friends Actor Ramesh Khanna opens up