‘சிக்மா ஸ்டைல்’ பாடலில் ஜேசன் சஞ்சய் நடனத்தால் உற்சாகமடைந்த ரசிகர்கள்! சிக்மா ஸ்டைல் பாடல் எப்படி இருக்கு?
Fans were excited by Jason Sanjay dance in the song Sigma Style How is the song Sigma Style
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ (Sigma) திரைப்படத்தின் முதல் பாடலான ‘சிக்மா ஸ்டைல்’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் ஜூலை 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் முதல் திரைப்படம் என்பதால் ‘சிக்மா’ மீது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் வெளியாகியுள்ள ‘சிக்மா ஸ்டைல்’ பாடலில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லாவுடன் இணைந்து ஜேசன் சஞ்சயும் தோன்றி நடனமாடியிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
தமன் இசையமைத்துள்ள இந்தப் பாடலை தமன், ஸ்மைல் துப்பாக்கிஸ் மற்றும் எம்சி ரூட் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இளைஞர்களை கவரும் வகையில் பாப் இசை பாணியில் உருவாக்கப்பட்டுள்ள பாடலின் லிரிக் வீடியோவும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகள் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளன. குறிப்பாக, “தியேட்டர் தெறிக்கும் மச்சி”, “பதவி மேல ஆசை இல்லை”, “தனி வழி”, “அந்த ஆண்டவன் என் பக்கம்”, “குனியாது தல நெவர் எவனுக்கும்” போன்ற வரிகள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
மேலும், பாடலின் காட்சியமைப்பு, பிரம்மாண்டமான செட் வடிவமைப்பு, ஃபரியா அப்துல்லாவின் நடன அசைவுகள் மற்றும் சந்தீப் கிஷனின் தோற்றம் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. பாடலின் இறுதியில் இடம்பெறும் சில காட்சிகள் மற்றும் ‘J’ குறியீடு போன்ற அம்சங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் இந்த திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், அடுத்தடுத்த பாடல்கள், டிரெய்லர் மற்றும் படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.
English Summary
Fans were excited by Jason Sanjay dance in the song Sigma Style How is the song Sigma Style