என் நடத்தையின் மீது கலங்கம் கற்பிக்கும்...! ஆர்த்தி கொடுத்த அதிர்ச்சி விளக்கம்! - Seithipunal
Seithipunal


மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி நேற்று அறிவித்திருந்த நிலையில், இன்று ஆர்த்தி தனது தரப்பு விளக்கத்தை கொடுத்துள்ளார்.

அதில், "சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். 

பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக நான் உணர்கிறேன்.

என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. 

நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல....

ஆழ்ந்த மன வேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன். ஆனால் என் மீது குற்றம் சாட்டியும் என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. 

ஒரு தாயாக எனக்கு எப்பொழுதும் என் குழந்தைகளின் நலனும், எதிர்காலமுமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது. 

மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால் இவற்றை மறுப்பதும் என் முதல் கடமையாகிறது. தற்போது இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும், மனோதிடத்தையும் அவர்களுடன் ஒருத்தியாக நின்று அவர்களுக்கு வழங்குவதே என் தலையாய கடமை. 

காலம் நடந்த உண்மைகளை எந்த பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன். இந்த கடின காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இத்தனை காலமாக எங்களுக்கு ஆதரவு மட்டுமன்றி நல்வழி காட்டி வரும் பத்திரிக்கை ஊடக மற்றும் ரசிகப்பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றி. 

உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே என்னையும் என் குழந்தைகளையும் இந்த காலகட்டத்தில் தூணாக காத்து நிற்கும். இந்த சோதனையில் இருந்து நாங்கள் மீண்டு வர உங்கள் பிரார்த்தனைகள் துணை நிற்க வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்" என்று ஆர்த்தி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aarti statement about Jayam Ravi Divorce announce


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->