அடித்து ஆடும் இந்திய ரிசர்வ் வங்கி! 64 டன் தங்கம் மீண்டும் இந்தியாவுக்கு – வரலாற்றில் முதல் முறையாக உள்நாட்டு தங்க இருப்பு உயர்வு!
Reserve Bank of India is on the move 64 tons of gold returned to India domestic gold reserves increase for the first time in history
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த மார்ச் முதல் செப்டம்பர் 2025 வரையிலான காலத்தில் 64 டன் தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து மீண்டும் நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் உள்ள மொத்த தங்க இருப்பு 575.8 டன்னாக உயர்ந்துள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிகாரபூர்வ தரவுகளின்படி, செப்டம்பர் 2025 நிலவரப்படி இந்தியாவின் மொத்த தங்க இருப்பு 880.8 டன் ஆகும். இதில் 290.3 டன் தங்கம் இங்கிலாந்து வங்கியும், பன்னாட்டு தீர்வுகளுக்கான வங்கியும் (BIS) வைத்துள்ளன. மேலும், 14 டன் தங்கம் தங்க வைப்புத் திட்டங்களில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 18 மாதங்களில் உள்நாட்டில் வைக்கப்பட்ட தங்கத்தின் அளவு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. இந்திய வரலாற்றில் இவ்வளவு பெரிய அளவிலான தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து திரும்பக் கொண்டுவந்தது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் போர், தாலிபான் ஆட்சிக்கு பிறகு ஆப்கானிஸ்தானின் நிதி முடக்கம் போன்ற சர்வதேச நிகழ்வுகள் வெளிநாட்டில் வைக்கப்பட்ட தங்கத்தின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை எழுப்பின. இதைத் தொடர்ந்து, இந்தியா தனது தங்கத்தை மீண்டும் நாட்டிற்குள் கொண்டு வர முடிவு செய்தது.
ரஷ்யா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் வெளிநாட்டு நாணய இருப்புகள் முடக்கப்பட்ட சம்பவங்கள், இதுபோன்ற அபாயங்களை எதிர்காலத்தில் தவிர்க்க இந்திய ரிசர்வ் வங்கியை எச்சரித்தன. இதனால் தங்கத்தை நாட்டுக்குள் வைப்பது பாதுகாப்பான தேர்வாக கருதப்பட்டது.
தங்கத்தின் விலை தற்போது உலகளவில் மீண்டும் உயரத் தொடங்கியதால், ரிசர்வ் வங்கி தற்காலிகமாக தங்கம் வாங்குவதை நிறுத்தியுள்ளது.அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைவதால் தங்க விலை தாறுமாறாக உயரும் நிலையில், "விலை குறையும் போது வாங்குவது புத்திசாலித்தனமான முடிவு" என RBI மதிப்பீடு செய்துள்ளது.
உலகளாவிய மத்திய வங்கிகள் 2024ஆம் ஆண்டில் மட்டும் $84 பில்லியன் மதிப்பிலான தங்கத்தை வாங்கியுள்ளன. அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களும், கருவூலப் பத்திரங்களின் நம்பகத்தன்மை குறைந்ததும், தங்கத்தை முக்கியமான முதலீடாக மாறச் செய்துள்ளது.
DSP மியூச்சுவல் ஃபண்ட் ஜூலை 2025 அறிக்கையின்படி, உலக தங்கச் சந்தையில் இந்தியாவின் பங்கு 15%, இதன் மொத்த மதிப்பு $23 டிரில்லியன் ஆகும். இதுவரை வெட்டியெடுக்கப்பட்ட தங்கத்தின் 65% நகைகள் வடிவில் உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பு 35% அதிகரித்துள்ளது — 2020 நிதியாண்டில் 653 டன் இருந்தது, மார்ச் 2025ல் 880 டன் ஆனது.
இதன் மூலம் இந்தியா உலக தங்க இருப்பு தரவரிசையில் 7வது இடத்திற்கு உயர்ந்துள்ளது (2015ல் 10வது இடத்தில் இருந்தது).
உலக தங்க கவுன்சிலின் தகவலின்படி,
2021ல் இந்தியாவின் அந்நிய செலாவணியில் தங்க பங்கு 6.86%,
2025ல் அது 11.35% ஆக உயர்ந்துள்ளது.
இது சீனாவுக்கும் பிற ஆசிய நாடுகளுக்கும் சவாலாக மாறக்கூடிய வளர்ச்சி என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போதைய அந்நிய சொத்து நிலை
செப்டம்பர் 2025 நிலவரப்படி, இந்தியாவின் மொத்த அந்நிய சொத்துக்கள் 579 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலுள்ளது.
இதில் –
489.54 பில்லியன் டாலர் பத்திரங்களில்,
46.11 பில்லியன் டாலர் பிற மத்திய வங்கிகள் மற்றும் BIS உடனான வைப்புகளில்,
43.53 பில்லியன் டாலர் வெளிநாட்டு வர்த்தக வங்கிகளுடனான வைப்புகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
தங்கத்தின் மீள்வரவு இந்தியாவின் பொருளாதார பாதுகாப்பில் ஒரு வரலாற்றுச் சாதனை என வல்லுநர்கள் பாராட்டுகின்றனர். இது நாட்டின் நிதி சுயமரியாதையையும், உலக பொருளாதார மாற்றங்களுக்கெதிரான எதிர்ப்பு வலிமையையும் வெளிப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
English Summary
Reserve Bank of India is on the move 64 tons of gold returned to India domestic gold reserves increase for the first time in history