உலகப்போர்.. மன்னிப்பு கோரிய முன்னாள் பிரதமர் காலமானார்!
World War Former Prime Minister who sought forgiveness has passed away
உலகப்போர் அத்துமீறல்களுக்காக மன்னிப்பு கோரிய முன்னாள் ஜப்பான் பிரதமர் டோமிச்சி முர்யமா காலமானார்
ஜப்பான் சோஷியாலிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரான டோமிச்சி முர்யமா, கடந்த 1994-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1996-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஜப்பானின் பிரதமராக பதவி வகித்தார். கடந்த 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி முர்யமா வெளியிட்ட மன்னிப்பு அறிக்கை மிகவும் பிரபலமானதாகும்.
இவர் , உடல்நலக்குறைவு காரணமாக அவரது சொந்த ஊரான ஒய்டா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி முர்யமா இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 101 ஆகும்.
கடந்த 1945-ம் ஆண்டு, ஜப்பான் அரசு நிபந்தனையின்றி சரணடைந்த பின்னர் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. அப்போது அந்த தினத்தின் 50-வது ஆண்டு நினைவு நாளையொட்டி முர்யமா ஒரு மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டார். அதில், போர்க்காலங்களில் ஜப்பான் ராணுவம் நடத்திய போர்க்குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களுக்கு மன்னிப்பு கோருவதாக அவர் கூறினார்.
அவரை தொடர்ந்து ஜப்பான் பிரதமராக பதவி வகித்த அனைவரும், ஜப்பானின் போர்க்குற்றங்களுக்காக மன்னிப்பு கோரினர். ஆனால் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த 2013-ம் ஆண்டிற்கு பிறகு மன்னிப்பு கோருவதை நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
World War Former Prime Minister who sought forgiveness has passed away