ட்ரம்ப் பயணித்த ஹெலிகாப்டரில் திடீர் கோளாறு: நடுவானில் திகிலை ஏற்படுத்திய இங்கிலாந்து பயணம்..!
Trumps helicopter suffers sudden malfunction
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இங்கிலாந்துக்கு பயணம் செய்துள்ளார். இவர் பயணம் செய்த ஹெலிகாப்டரில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் மாற்று ஹெலிகாப்டரில் பயணம் செய்துள்ளார்.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தை முடித்துக்கொண்டு இங்கிலாந்து செக்கர்ஸ் மாளிகையில் இருந்து ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்திற்கு தனது மனைவி மெலானியா டிரம்ப்புடன் அதிபருக்கான பிரத்யேக ஹெலிகாப்டரில் அவர் பயணம் செய்துள்ளார்.
அப்போது, ஹெலிகாப்டரில் சிறிய அளவிலான கோளாறு ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விமானிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு, லூடன் விமான நிலையத்திற்கு அருகே உள்ள ஒரு விமான தளத்தில் ஹெலிகாப்டரை பத்திரமாக தரையிறக்கியுள்ளனர். திடீரென அமெரிக்க அதிபர் சென்ற ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர், அதிபரின் பாதுகாப்பிற்காக உடன் வந்த மற்றொரு துணை ஹெலிகாப்டரில் அதிபர் டிரம்ப்பும், அவரது மனைவியும் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்திற்குப் புறப்பட்டுள்ளனர். இந்த திடீர் மாற்றத்தால், அவர்களது பயணம் சுமார் 20 நிமிடங்கள் தாமதமாகியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே ஹெலிகாப்டர் மாற்றப்பட்டது என்றும், அதிபருக்கோ அவரது மனைவிக்கோ எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளது.
ட்ரம்பின் இங்கிலாந்து பயணத்தின்போது, அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோரை சந்தித்துப் பேசியமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Trumps helicopter suffers sudden malfunction