சிங்கப்பூர் தேர்தலும், ஆளுங்கட்சியின் அசூர வெற்றியும்! ஆச்சர்யம் அளித்த புதிய கட்சி!
Singapore 2020 general election results
சிங்கப்பூர் பொதுத்தேர்தல் கோவிட் காலத்தில் தெற்காசியாவில் நடைபெற்ற இரண்டாவது பொதுத் தேர்தல். அப்படியானால் முதல் தேர்தல்? கடந்த ஏப்ரல் மாதத்தில் தென் கொரியாவில் நடத்தப்பட்டது.
பாராளுமன்ற அமைப்பு:
சிங்கப்பூரில் பாராளுமன்றம் 14 Single Member Constituency எனப்படும் தனி தொகுதிகளையும் (நம் நாட்டில் உள்ள மாதிரி தனி தொகுதியல்ல, இது வேறுபட்டது), 17 Group Representatives Constituency குழுத் தொகுதிகளையும், 3 NCMP (Non-constituency Member of Parliament) மற்றும் 9 Nominated MP நியமன உறுப்பினர்களையும் மொத்தமாக சேர்த்து 105 இடங்களைக் கொண்டது.
தனி தொகுதி (Single Member Constituency-SMC)-14 :
அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஒரு நபர் மட்டும் போட்டியிடும் தொகுதி. இது நமது பாராளுமன்ற, சட்டமன்ற வேட்பாளர்கள் போட்டியிடுவதை போல தான்.
குழுத் தொகுதிகள் (Group Representatives Constituency-GRC)- 17
ஒவ்வொரு கட்சியில் இருந்தும் நான்கு ( 6 தொகுதிகள் ) மற்றும் ஐந்து (
11 தொகுதிகள் ) நபர்கள் போட்டியிடுவர். இதில் முக்கியமாக குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால்? இந்த தொகுதியில் குறைந்தபட்சம் ஒரு சிறுபான்மை சமூகத்தவர்(Minorities) இந்தியர் அல்லது மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர் இடம் பெற்றிக்க வேண்டும் என்பதாக சிங்கப்பூர் சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அனைத்து சமூகத்தின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடு இது!
Non-constituency Member of Parliament-3 :
இது எதிர்கட்சியின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு. முக்கியமான எதிர்கட்சி வேட்பாளர் தேர்தலில் தோற்றுவிட்டால் அவர்களை பாராளுமன்றத்திற்கு அனுமதிக்கும் சட்ட நடைமுறை இது. நம் பாராளுமன்றத்தில் ராஜ்ய சபா மாதிரியான அமைப்பு என்று எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
Nominated MP நியமன உறுப்பினர்கள்-9
இவர்கள் அனைவரும் குடியரசுத்தலைவரால் நேரடியாக நியமிக்கப்பட்டு பாராளுமன்றம் செல்பவர்கள். வெஸ்ட்மினிஸ்டரியல் சிஸ்டம் உலகளவிய சிஸ்டம் என்பதால் இந்தியப் பாராளுமன்றத்திற்கும் சிங்கப்பூர் பாராளுமன்றத்திற்கும் பல விசயங்கள் ஒத்துப் போகின்றன!
இந்தியப் பாராளுமன்றத்தைப் போல, பாராளுமன்றத்தை கொண்ட சிங்கப்பூரின் 13 வது பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் 27 லட்சம் மக்கள் தங்கள் வாக்கை செலுத்தியுள்ளனர். மொத்தம் உள்ள 93(14 SMC+17 GRC=31) இடங்களில் 83 இடங்களில் பிரதமர் லீ அவர்களின் மக்கள் செயல் கட்சி(People Action Party-PAP) வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி (Workers Party-WP) கடந்த முறையை விட கூடுதலாக 4 இடங்களைப் பெற்று, சிங்கப்பூர் வரலாற்றில் ஒரு எதிர்கட்சி இத்தனை இடங்களில், அதுவும் இரண்டு GRC (Aljunied GRC (5 உறுப்பினர்) , Sengkang GRC (4 உறுப்பினர்) ஒரு SMC(Hougang SMC) என மொத்தம் 10 தொகுதிகளில் வென்றது இதுவே முதல் முறை.
முந்தைய பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவரான தொழிலாளர் கட்சியின் ப்ரீத்தம் சிங் இம்முறையும் அல்ஜுனட் GRC யில் வெற்றி பெற்றுள்ளார். 21 தொகுதிகளுக்கான இடத்தில் மட்டுமே போட்டியிட்ட தொழிலாளர் கட்சி 10 உறுப்பினர்களை பெற்றுள்ளது.
ஆளுங்கட்சியான மக்கள் செயல் கட்சி கடந்த முறையை விட குறைவான சதவீதத்தில் வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி பெற்ற வாக்கு விகிதம் 61.24 விழுக்காடு.ஆனால் 2015ஆம் ஆண்டு தேர்தலில் கட்சி பெற்ற வாக்கு விகிதம் 69.9 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் செயல் கட்சியில் இருந்து பிரிந்து வந்த டான் செங் போக் தொடங்கிய சிங்கப்பூர் முன்னேற்ற கட்சி இந்த தேர்தலில் 10 விழுக்காடு வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி : மீனாட்சி சுந்தரம்
English Summary
Singapore 2020 general election results