துபாயில் சாலை விபத்து; இந்திய தொழிலாளர்கள் உள்பட 07 பேர் பரிதாப பலி; 09 பேர் படுகாயம்; பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்..!
Seven people including Indian workers tragically killed in a road accident in Dubai
துபாயில் இன்று (திங்கள்கிழமை) நடந்த சாலை விபத்தில், இந்திய தொழிலாளர்கள் உள்பட 07 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலை நடுவே பழுதடைந்த நிலையில், நின்றுகொண்டிருந்த லாரி ஒன்றின் பின்புறத்தில், தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மினி பேருந்து அதிவேகமாக மோதியதில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து, துபாய் காவல் துறையின் முதற்கட்ட விசாரணையின்படி தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
எமிரேட்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அது சாலையின் நடுவிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது அந்த லாரியின் பின்புறமாக வந்த மினி பேருந்தின் ஓட்டுநர், போதிய இடைவெளியைப் பேணாமலும், கவனக்குறைவாகவும் செயல்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் மீது பலமாக மோதியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விபத்தில் மினி பேருந்தின் முன்பகுதி முற்றிலும் நசுங்கியுள்ள நிலையில், 07 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், 09 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்தில் இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதை துபாயில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத நிலையில், தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
"எங்கள் அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று காயமடைந்த இந்தியர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவையும் வழங்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம்" என்று இந்திய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
English Summary
Seven people including Indian workers tragically killed in a road accident in Dubai