'பணிநேரத்தில் அலைபேசி பேசுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்': ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவுறுத்தல்..!
Minister Tamilan Parthiban has instructed drivers and conductors to strictly avoid using mobile phones while on duty
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ.விஜய் தமிழன் பார்த்திபன், இன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து மாநகர் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் போக்குவரத்துத் துறை செயலாளர் மா. வள்ளலார். சிறப்புச் செயலாளர் ஆர்.லில்லி மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மரு.த.பிரபுசங்கர் அனைத்துப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், இயக்குனர், சாலை போக்குவரத்து கழகம் மற்றும் தனி அலுவலர் மற்றும் தலைமை நிதி அலுவலர்கள், பொது மேலாளர்கள் மற்றும் பிற உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்கள்.
அதன்படி, தமிழ்நாட்டில், உள்ள எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள், 26 மண்டலங்கள், 317 பணிமனைகள், 20 தொழிற்கூடங்கள் மற்றும் 28 வாகன பயிற்சி கூடங்கள் மூலம் 21,527 பேருந்துகளை இயக்கி வருகின்றன. தினசரி சுமார் 2.05 கோடி மக்கள் இச்சேவையைப் பயன்படுத்துகின்றனர்.

குறிப்பாக மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மூத்த தமிழறிஞர்கள், விருதாளர்கள், தமிழ்மொழித் தியாகிகள், கலைமாமணி விருதாளர்கள் மற்றும் மகளிருக்கு கட்டணமில்லா சலுகை பயண வசதிகளும் வழங்கப்படுகின்றன. இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் பேசுகையில்; பேருந்துகளை நேரத்திற்கு இயக்குதல், தூய்மையாக பராமரித்தல், பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ளுதல், மாணவர்கள்-முதியோர்-மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்தல், பேருந்துகளை உரிய நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குதல் ஆகியவற்றை உறுதி செய்ய அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், பணியாளர்களின் நலன் மற்றும் பணி பாதுகாப்பு, பணிமனை தர உயர்வு, உட்கட்டமைப்பு மேம்பாடு, பண்டிகை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் சீரான பேருந்து இயக்கம், குளிர்சாதன பேருந்துகளின் பராமரிப்பு, வழித்தட உணவகங்களில் உணவின் தரத்தை கள ஆய்வு செய்து மேம்படுத்துதல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணிநேரத்தில் அலைபேசி பயன்படுத்துவதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும் என்றும், போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்களை கண்டறிந்து புதிய வழித்தடங்கள் உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டின் கீழ், Chennal One App பயன்பாட்டை மக்களிடம் அதிகமாக கொண்டு சேர்த்தல், இணையதள முன்பதிவில் Voice Command வசதி ஏற்படுத்துதல், பேருந்துகளில் காலி இருக்கைகள் மற்றும் பேருந்து வருகை நேரத்தை அறியும் செயலி உருவாக்குதல், தொலைதூர பேருந்துகளை முழுமையாக Online Booking முறைக்கு கொண்டு வந்து முன்பதிவில்லா இருக்கைகளை பூஜ்ஜியமாக்குதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
அதேப்போன்று, பேருந்துகள் மற்றும் சொத்துகள் மூலம் விளம்பரம், வாடகை மூலம் இதர வருவாயை உயர்த்துதல், மெட்ரோ ரயில் இணைப்பை கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குதல், பேருந்து நிலையங்களில் ஒலிபெருக்கி மற்றும் நிகழ்நேர தகவல் பலகைகள் மூலம் உதவி எண் மற்றும் புறப்படும் நேரத்தை அறிவித்தல், பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றையும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், போர்க்கால அடிப்படையில் பேருந்துகளின் முகப்பு விளக்கு, பின்புற சிவப்பு விளக்கு மற்றும் Reflective Sticker ஆகியவற்றை சரிபார்த்து தேவையான மாற்றங்களை செய்யவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆய்வுக்குப் பின்னர், அமைச்சர் மாநகர் போக்குவரத்துக் கழக (MTC) ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்ததோடு, போக்குவரத்துத் துறையின் 149 கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பயணிகளிடமிருந்து புகார்களை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Minister Tamilan Parthiban has instructed drivers and conductors to strictly avoid using mobile phones while on duty