திண்டுக்கல் அமைச்சர் விக்னேஷ் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர், மாவட்ட அதிகாரிகளுக்கு இணையாக மாவட்ட செயலாளருக்கு இடமா...? தவறான முன்னுதாரம் என அதிகாரிகள் கருத்து..!
TVK District Secretary seated alongside the Minister at the Dindigul review meeting
திண்டுக்கல் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விக்னேஷ், முதன்முதலாக இன்று திண்டுக்கல் வந்து நகரில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து மாலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்த நிலையில், திண்டுக்கல் எம்.பி., ஆர்.சச்சிதானந்தம், கரூர் எம்.பி., ஜோதிமணி, அய்யனார் எம்எல்ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை திட்ட இயக்குனர் கங்காதரணி, மாவட்ட எஸ்.பி.,பிரதீப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் இவர்கள் அமர்ந்திருந்த வரிசையில் தவெக மாவட்ட செயலாளர் தர்மராஜ்க்கும் இடம் அளிக்கப்பட்டிருந்தமை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, மக்கள் பிரதிநிதியாக இல்லாத அவரை எதன் அடிப்படையில் அமைச்சர், மாவட்ட அதிகாரிகளுக்கு இணையாக மேலே அமரவைத்துள்ளனர் என்ற கேள்வி கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளிடம் எழுந்துள்ளது.
இவ்வாரான நிகழ்வுகளில் கட்சியினருக்கு ஊக்கமளிப்பதால், கட்சி நிர்வாகிகள், அரசு நிர்வாகத்தில் முழுமையாக தலையிட வாய்ப்புள்ளது என்றும், கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த செயலை ஊக்குவிக்க கூடாது என கடந்த ஆட்சிக்காலங்களில் கூட கட்சி நிர்வாகிகள் யாரும் மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட அதிகாரிகளுக்கு இணையாக அமர்ந்து துறைரீதியான ஆய்வில் ஈடுபட்டதில்லை எனவும், கூட்டத்தில் ஒரு ஓரமாக நின்றுகொண்டு இருப்பர். இவர்கள் செய்துள்ளது தவறான முன்னுதாரம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், திண்டுக்கல் நகரின் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்து அமைச்சர், அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி பதிலை பெற்றார். அதனை தொடர்ந்து அமைச்சர் விக்னேஷ் பேசுகையில் கூறியதாவது;
கனிமவளக்கொள்ளையை முற்றிலுமாக தடுக்கவேண்டும் என்றும், யார் சிபாரிசு செய்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடாது எனவும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளையும் மேம்படுத்தவேண்டும். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தரவேண்டும் என்றும் கூறியுள்ளார். அத்துடன், தவறான பாதையில் குழந்தைகள் செல்கிறார்களா என கண்காணிக்கவேண்டும் எனவும், நகரம், கிராமங்கள் என சுகாதாரம் காக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
TVK District Secretary seated alongside the Minister at the Dindigul review meeting