ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டெல்லி உள்ளிட்ட வட இந்தியப் பகுதிகள் அதிரந்ததால் மக்கள் பீதி!
Powerful 6 Magnitude Earthquake Strikes Afghanistan Tremors Felt in Delhi
வெனிசுலாவில் இந்த வாரம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 920-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து உலகம் இன்னும் மீளாத சூழலில், இன்று ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவில் மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுப் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தின் மையம்
ஆப்கானிஸ்தானின் மிக முக்கிய மலைத்தொடரான இந்து குஷ் (Hindu Kush) பகுதியில் இன்று இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 215 கிலோமீட்டர் ஆழத்தில் மிகத் தீவிரமாகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் மிக ஆழமான பகுதியில் ஏற்பட்டதன் காரணமாக, இதன் அதிர்வுகள் பல நூறு கிலோமீட்டர் தொலைவிற்குப் பரவி அண்டை நாடுகளையும் அதிரவைத்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தானில் நில அதிர்வு
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாகப் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் தலைநகர் புதுடெல்லி உள்ளிட்ட வட இந்தியப் பகுதிகளில் இன்று மாலை சக்திவாய்ந்த நில அதிர்வுகள் உணரப்பட்டன. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த பொதுமக்கள், தங்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறிப் பாதுகாப்பிற்காகச் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதங்கள் அல்லது சொத்துச் சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வமான விரிவான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
பாகிஸ்தானில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள்
ஆப்கானிஸ்தானில் இந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பாக, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அண்டை நாடான பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 5.5, 4.3, 4.5 மற்றும் 4.7 ரிக்டர் அளவுகளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கங்கள் பதிவாகிப் பொதுமக்களை உலுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தெற்காசியப் பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்படும் இந்த நில அதிர்வுகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
English Summary
Powerful 6 Magnitude Earthquake Strikes Afghanistan Tremors Felt in Delhi