"கடந்த ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டிருந்தன" - மதுரையில் எம்பி சு.வெங்கடேசன் அதிரடி பேச்சு! - Seithipunal
Seithipunal


மதுரையில் இன்று நடைபெற்ற அனைத்துத் துறை வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடந்த கால திமுக ஆட்சியைத் தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசுடன் ஒப்பிட்டுக் காட்டமாக விமரிசித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்ட ஆய்வுக் கூட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று அனைத்துத் துறை சார்ந்த வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையாளர் கவுரவ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மதுரை எம்பி சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.கல்லாணை, எஸ்.ஆர்.தங்கப்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ. 4.34 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் வாரிசுதாரர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

அமைச்சரின் வழிகாட்டல்

கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், "முதலமைச்சர் விஜய் மக்களுக்கு முற்றிலும் நேர்மையான, வெளிப்படையான ஆட்சியை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். கடந்த கால ஆட்சிகளைப் போல் அல்லாமல், அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களை நேரடியாகச் சென்றடைய வேண்டும் என அவர் விரும்புகிறார். இதற்கு அரசு அதிகாரிகள் தங்களது ஆலோசனைகளைத் துணிச்சலோடு வழங்கலாம். குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஆலோசனைகளை வழங்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

திமுக மீது சு.வெங்கடேசன் சாடல்

அமைச்சரைத் தொடர்ந்து பேசிய மதுரை எம்பி சு.வெங்கடேசன், கடந்த திமுக ஆட்சியை நேரடியாக விமரிசித்துப் பேசினார். "கடந்த காலங்களில் நேர்மையாகச் செயல்பட விரும்பிய அதிகாரிகளுக்குச் சில தடைகள் இருந்தன. அவர்களது கைகள் கட்டப்பட்டு, கைவிலங்கு போடப்பட்டிருந்த ஒரு சூழல் நிலவியது. ஆனால், தற்போதைய தவெக ஆட்சியில் அந்த நிலை முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் நேர்மையான நிர்வாகத்தை நடத்த விரும்புவதால், நேர்மையான அரசு அதிகாரிகளுக்குத் தவெக ஆட்சி ஒரு பொற்காலமாகத் திகழ்கிறது. எனவே, அதிகாரிகள் எவ்வித பயமுமின்றித் திறம்படச் செயல்பட்டு மக்கள் நலத்திட்டங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும்" என்று பேசினார். திமுக கூட்டணியில் நீண்ட காலம் நீடித்த இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான சு.வெங்கடேசனின் இந்த விமர்சனம் தற்பொழுது பேசுபொருளாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Su Venkatesan Praises TVK Administration Criticizes Previous Government


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->