ஏமன், சோமாலியா அருகே பயங்கரம்; இருவேறு தனித்தனிச் சம்பவங்களில் 22 இந்தியர்களுடன் 02 கப்பல்களை கடத்திய கடற்கொள்ளையர்கள்..!
Pirates hijack 2 ships with 22 Indians on board in two separate incidents near Yemen and Somalia
ஏமன் மற்றும் சோமாலியா கடற்பகுதிகளில் நடந்த இரு வேறு தனித்தனிச் சம்பவங்களில் 22 இந்தியர்களுடன் 02 கப்பல்களை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளதாக கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு மூத்த அதிகாரி அளித்துள்ள தகவலில் படி, எரித்ரியா நாட்டு கொடியுடன் கூடிய எம்.டி. சிபு 1 என்ற எண்ணெய் டேங்கர் கப்பல், ஆகஸ்ட் 20 அன்று ஏமன் கடற்கரையில் இருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் ஏடன் வளைகுடாவில் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கப்பலில் 20 ஊழியர்கள் இருந்ததாகிவரும், இவர்களில், 16 பேர் இந்தியர்கள் என்றும் சிரியா, சூடான், ஈராக் நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும், எந்த நாட்டவர் என இதுவரை தெரியாத ஒருவரும் கப்பலில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்து எஸ்.கே.எஸ். கிருஷி மரைன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் அளித்த தகவலின்படி, ஆயுதம் ஏந்திய ஆறு கடற்கொள்ளையர்கள் கப்பலில் ஏறி, அதனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாகவும், சமீபத்திய தகவலின்படி, இந்திய கப்பல் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடுத்ததாக, கேமரூன் நாட்டு கொடியுடன் கூடிய லுட்டுப் என்ற சரக்குக் கப்பல் கடந்த 17-ஆம் தேதி சோமாலியாவின் பண்ட்லேண்ட் கடற்கரைக்கு அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் இருந்த 10 ஊழியர்களில் 6 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் போது, ஏகே 47 ரக துப்பாக்கிகளுடன் இரண்டு சிறிய படகுகளில் வந்த 08 கடற்கொள்ளையர்கள் இந்தக் கப்பலில் ஏறி அதனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் இதுவரை யாருக்கும் காயம் போன்ற சம்பாவிதங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை என்று கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
English Summary
Pirates hijack 2 ships with 22 Indians on board in two separate incidents near Yemen and Somalia