வானிலை எச்சரிக்கை ! இன்று முதல் 3 நாட்கள் மழை வெளுத்து வாங்கப்போகும் அந்த 5 மாவட்டங்கள் என்னென்ன..?
Weather warning What 5 districts that receive heavy rain 3 days starting today
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வருகிற 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் வலுவிழந்த காற்றழுத்தத் தாழ்வுப் பாதையின் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
23-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
இன்று 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.மேலும், மழையுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

கோவை, நீலகிரியில் கனமழை
வருகிற 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.அதே நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் பிற பகுதிகள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.வருகிற 26 மற்றும் 27-ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது
இன்று முதல் 23-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. இருப்பினும், உள்தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்பநிலை சற்று உயரக்கூடும்.இந்த காலகட்டத்தில் உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கலாம். தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே காணப்படும்.வருகிற 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் எப்படி இருக்கும்?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் 21 முதல் 25-ஆம் தேதி வரை பலத்த காற்று வீசக்கூடும். மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதுடன், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
21-ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளிலும் இதேபோன்ற பலத்த காற்று வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகம் வரையிலும் காற்று வீச வாய்ப்புள்ளது.
22 முதல் 25-ஆம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகம் வரையிலும் காற்று வீசக்கூடும். அந்தமான் கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளிலும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலிலும் பலத்த காற்று
21 மற்றும் 22-ஆம் தேதிகளில் மத்தியமேற்கு அரபிக்கடலை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகம் வரையிலும் காற்று வீசக்கூடும்.
23-ஆம் தேதி கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகம் வரையிலும் காற்று வீச வாய்ப்புள்ளது. இதே நிலை 24 மற்றும் 25-ஆம் தேதிகளிலும் தொடரக்கூடும்.இதனால், மேற்குறிப்பிட்ட நாட்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
English Summary
Weather warning What 5 districts that receive heavy rain 3 days starting today