எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வாங்கும் வேகம் விவசாயிகளுக்கு உதவுவதில் ஏன் இல்லை...? - டிடிவி தினகரன் காட்டம்
Why MLAs not hurry to buy cars to help farmers TTV Dhinakaran Kattam
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு கார் வழங்குவதில் வேகம் காட்டும் அரசு, விவசாயிகளுக்கான குறுவைத் தொகுப்பை வழங்குவதில் மட்டும் ஏன் காலதாமதம் செய்கிறது? விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டிய விஷயத்தில் இதே வேகத்தை அரசு காட்டத் தயங்குவது ஏன்? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,"குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.134 கோடி மதிப்பில் குறுவைத் தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார்.
ஆனால், அரசு அறிவித்த இந்தத் தொகுப்பு திட்டத்தின் பலன் இதுவரை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறுவை சாகுபடி பணிகள் நிறைவடைந்து, தற்போது அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையிலும் உதவித்தொகை கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
குறுவை சாகுபடி பணிகளுக்காக இயந்திரம் மூலம் நடவு செய்ததற்கான ரசீதுகள் உள்ளிட்ட தேவையான அனைத்து ஆவணங்களையும் விவசாயிகள் முறையாக சமர்ப்பித்துள்ளனர். விண்ணப்பங்களை அளித்து இரண்டு மாதங்களுக்கும் மேலாகியும், அவர்களுக்கான நிதி இதுவரை விடுவிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சாகுபடி காலத்திலேயே கிடைக்க வேண்டிய உதவித்தொகை, அறுவடை நேரத்திலும் கிடைக்காமல் இருப்பது திட்டத்தின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது என்றும் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாக அளித்த வாக்குறுதியையும் தவெக அரசு இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஏற்கனவே சாகுபடி செலவு உயர்வு, உரம் மற்றும் விதை உள்ளிட்ட இடுபொருட்களின் விலை அதிகரிப்பு, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை என விவசாயிகள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.இந்த நிலையில், அரசு அறிவித்த குறுவைத் தொகுப்பையும் உரிய நேரத்தில் வழங்காமல் தாமதப்படுத்துவது விவசாயிகளின் பொருளாதார சுமையை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் நேரடியாக தொடர்புடைய குறுவைத் தொகுப்பு திட்டத்தில் இனியும் அலட்சியம் காட்டாமல், அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
ரூ.134 கோடி மதிப்பிலான குறுவைத் தொகுப்பை தகுதியான விவசாயிகள் அனைவருக்கும் முழுமையாகவும், எந்தவித காலதாமதமும் இன்றியும் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட முழுமையான வேளாண் கடன் தள்ளுபடி வாக்குறுதியையும் தாமதமின்றி நிறைவேற்றி, கடன் சுமையில் தவிக்கும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தவெக அரசை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Why MLAs not hurry to buy cars to help farmers TTV Dhinakaran Kattam