பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை!
pak vs afg fight
இஸ்லாமாபாத்/காபூல்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ராணுவங்களுக்கு இடையே எல்லையில் நிலவி வந்த அமைதி ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மீண்டும் நள்ளிரவில் எல்லையின் பல்வேறு இடங்களில் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை வெடித்தது.
சண்டை மற்றும் பதற்றம்
இரு தரப்பினருக்கும் சாமன் எல்லைப் பகுதியில் கடும் மோதல் ஏற்பட்டு மாறி மாறித் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். மேலும், சாமன் - காந்தஹார் நெடுஞ்சாலையிலும் சண்டை நடந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மோதலில் இரு தரப்பிலும் வீரர்கள் சிலர் காயம் அடைந்துள்ளதாகவும், எல்லையில் பதற்றம் நிலவுவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
பரஸ்பரக் குற்றச்சாட்டுகள்
பாகிஸ்தான் குற்றச்சாட்டு: பதானி பகுதியில் ஆப்கானிஸ்தான் படைகள் மோட்டார் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்குப் பாகிஸ்தான் படைகள் பதிலடி கொடுத்ததாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு: போர் நிறுத்தம் மீறப்பட்டதாகக் குற்றம் சாட்டிய ஆப்கானிஸ்தான் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், "காந்தஹாரின் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் புதிய தாக்குதல்களை நடத்தி பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி உள்ளது. ஸ்பின் போல்டாக் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பொது மக்களைக் குறிவைத்து பாகிஸ்தான் செயல்படுகிறது," என்று தெரிவித்தார்.