பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட நார்வே பெண் பத்திரிகையாளர்: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் திடீர் முடக்கம்!
Norway Journalist Helle Social Media Accounts Blocked After Questioning PM Modi
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் மனித உரிமை மீறல் குறித்துக் காரசாரமாகக் கேள்வி எழுப்பிய அந்நாட்டுப் பெண் பத்திரிகையாளர் ஹெல்லே லிங் ஸ்வெண்ட்சன் (Helle Lyng Svendsen) என்பவரின் முகநூல் (Facebook) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கங்கள் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளது சர்வதேச ஊடக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சையைக் கிளப்பிய அந்த ஒற்றைக் கேள்வி:
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோர் ஆகிய இரு தலைவர்களுக்கும் இடையே கடந்த திங்கள்கிழமை இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் முடிவில் இரு தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அனுமதி இல்லை என்று முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், நார்வேயின் முன்னணிப் பத்திரிகையாளரான ஹெல்லே லிங், பிரதமர் மோடியை நோக்கி, "பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், உலக நாடுகள் இந்தியாவை ஏன் நம்ப வேண்டும்?" என்ற அதிரடிக் கேள்வியை முன்வைத்தார். இக்கேள்விக்கு இருநாட்டுத் தலைவர்களும் பதிலளிக்காமல் அங்கிருந்து வெளியேறினர்.
சமூக ஊடகப் பக்கங்கள் முடக்கம்:
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, "பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது" என்று ஹெல்லே லிங் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டது சர்வதேச அளவில் விவாதப் பொருளானது.
பத்திரிகையாளர் ஹெல்லே லிங் பதிவு: "பத்திரிகை சுதந்திரத்திற்காகக் கொடுக்கப்படும் ஒரு சிறிய விலைதான் இது. ஆனால், எனது வாழ்நாளில் இதற்கு முன்பு நான் இப்படி ஒரு மோசமான அனுபவத்தைப் பெற்றதே இல்லை" என்று குறிப்பிட்டு, தனது இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கங்கள் முடக்கப்பட்டதற்கான ஸ்கிரீன்ஷாட்டுகளையும் எக்ஸ் தளத்தில் ஆதாரத்தோடு பகிர்ந்துள்ளார்.
சர்வதேச அளவில் குவியும் ஆதரவு:
அவரது சமூக ஊடகப் பக்கங்கள் முடக்கப்பட்ட இந்தச் சம்பவம் உலக அளவில் மிகப்பெரிய கருத்துச் சுதந்திர விவாதமாக வெடித்துள்ள அதேவேளையில், பத்திரிகையாளர் ஹெல்லே லிங்கிற்குப் பொதுமக்கள் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதர அலையை உருவாக்கியுள்ளது.
பிரதமரிடம் கேள்வி எழுப்புவதற்கு முன்பாக, கடந்த திங்கள்கிழமை வரை அவரது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தைப் பின்தொடர்வோரின் (Followers) எண்ணிக்கை வெறும் 800-க்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், இந்தச் சர்ச்சை வெடித்த கடந்த இரண்டே நாள்களில், உலகெங்கிலும் இருந்து அவருக்கு ஆதரவு பெருகியதால், அவரது எக்ஸ் பக்கப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை தற்போது 45,000-க்கும் அதிகமாக அதிரடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Norway Journalist Helle Social Media Accounts Blocked After Questioning PM Modi