அதிகரிக்கும் ஐ ஆதிக்கம்! AI காரணமாக Layoffs தொடராலம்! சிம்பாலிக்காக சொல்லும் மைக்ரோசாப்ட்! அதிர்ச்சியில் ஊழியர்கள்!
Microsoft Actions Layoffs Continue Due to AI Microsoft Says Symbolically Employees in Shock
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) உலகளாவிய அளவில் ஐடி துறையின் இயங்கும் முறையையே மாற்றி வருகிறது. இந்த மாற்றத்தின் விளைவாக, ஏராளமான பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் எடுத்துள்ள சில முக்கிய முடிவுகள், AI சார்ந்த பணி நீக்கங்கள் எதிர்காலத்திலும் தொடரலாம் என்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
மைக்ரோசாப்ட் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இந்த நிலையில், தற்போது தனது ஊழியர்களுக்கான நாளிதழ் சந்தாக்கள் மற்றும் நிறுவன நூலக அணுகலை ரத்து செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கற்றல் மற்றும் தகவல் சேகரிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதே இதற்கான காரணம் என கூறப்படுகிறது.
‘தி வெர்ஜ்’ வெளியிட்டுள்ள தகவலின்படி, மைக்ரோசாப்ட் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்தே செய்தி மற்றும் ஆய்வு சந்தாக்களை ரத்து செய்யத் தொடங்கியுள்ளது. பல ஊடக நிறுவனங்களுக்கு தானியங்கி மின்னஞ்சல் மூலம், “தற்போதைய ஒப்பந்தங்கள் காலாவதியான பிறகு புதுப்பிக்கப்பட மாட்டாது” என்ற அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த முடிவில், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கு உலகளாவிய அறிக்கைகளை வழங்கி வந்த ‘ஸ்ட்ராடஜிக் நியூஸ் சர்வீஸ் (SNS)’ உடனான உறவு முடிவுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், 2.2 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பயன்படுத்தி வந்த முக்கியமான தகவல் ஆதாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், “தி இன்ஃபர்மேஷன்” போன்ற முக்கிய வணிக வெளியீடுகளுக்கான டிஜிட்டல் அணுகலையும் பல ஊழியர்கள் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிறுவன நூலகத்தின் மூலம் வணிக மற்றும் தொழில்நுட்ப புத்தகங்களைப் பெறும் வசதியும் தற்போது இல்லை என ஊழியர்கள் கூறுகின்றனர்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் செலவுக் குறைப்பை மட்டுமல்லாது, AI-ஐ மையமாகக் கொண்ட ஒரு பெரிய மாற்றத்தின் பகுதியாகவே பார்க்கப்படுகிறது. மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாடெல்லா, நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி முழுமையாக AI சார்ந்ததாக இருக்கும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும், இந்த AI மாற்றத்துக்கு ஒத்துழைக்காத மூத்த நிர்வாகிகள் நிறுவனத்தை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்படலாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், மைக்ரோசாப்ட் மட்டுமல்லாமல், முழு ஐடி துறையிலும் AI காரணமான பணி மாற்றங்களும், வேலைநீக்கங்களும் இன்னும் தொடரும் என்ற அச்சம் வலுப்பெற்று வருகிறது.
English Summary
Microsoft Actions Layoffs Continue Due to AI Microsoft Says Symbolically Employees in Shock