மாணவர்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலி; ஜார்கண்ட் மாநில அரசுப் பணி நியமனத் தேர்வு ரத்து..!
Jharkhand government recruitment exam cancelled in response to ongoing student protests
ஜார்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய அரசுப் பணி நியமனத் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை கோரியும், தேர்வு நடைமுறைகளை ரத்து செய்யக் கோரியும் சீர்திருத்த சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் கடந்த 23 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் மற்றும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.
ஆனால், மாணவர்களின் கோரிக்கைகளுக்கு மாநில அரசு முறையான பதில் அளிக்காததால் போராட்டம் தீவிரமடைந்தது. இதன் தொடர்ச்சியாக, ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் இருந்து தீ பந்தம் ஏந்தி ஊர்வலமாக வந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆல்பர்ட் எக்கா சவுக்கில் திரண்டனர்.
அங்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் உருவபொம்மைகளை தீயிட்டு கொளுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மாணவர்களின் தீவிர போராட்டத்தைத் தொடர்ந்து, பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மாநில அரசு சார்பில் ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது. ராஞ்சியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மாணவர் பிரதிநிதிகளுடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஜார்கண்ட் மாநில அரசுப் பணி நியமனத் தேர்வு ரத்து செய்யபப்டுவதாக முடிவு எடுக்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டு முதல் டி.பி.டி.எல் (TDPL) மூலம் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்வுகளும் சி.ஐ.டி (CID) மூலம் விசாரிக்கப்படும் என்றும், முறைகேடுகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு தனி விசாரணை நடத்தும் என்றும் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
English Summary
Jharkhand government recruitment exam cancelled in response to ongoing student protests