இத்தாலியில் நடந்த கோர சாலை விபத்து: இந்தியர்கள் இருவர் பலி!
itly road accident
இத்தாலியில் நடைபெற்ற சாலை விபத்தில் 2 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
க்ராசிட்டோ பகுதியில் உள்ள ஆரேலியா மாநிலச் சாலையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேனும் மினி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு இந்தியர்கள் உள்பட மூவர் உயிரிழந்தனர். மேலும், குழந்தைகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப்படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் நாக்பூரைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பதிவில், “க்ராசிட்டோ அருகே நடந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் 2 இந்தியர்கள் உயிரிழந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்த குடும்பத்தினர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.