அஸ்திவாரத்தையே ஆட்டும் அமெரிக்கா? டிரம்ப் நிர்வாக நடவடிக்கைகளால் உலகளவில் தங்கம் விலை உச்சத்தை தொடும் அபாயம்!
Is America shaking its foundations The Trump administration actions risk sending gold prices to record highs worldwide
சர்வதேச அளவில் நடைபெறும் சிறு சிறு அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களே தங்கம் விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அறிந்த விஷயம். அந்த வகையில், அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள ஒரு முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கை தற்போது உலக நிதிச் சந்தைகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக, தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியாவில் தங்கம் என்பது ஆபரணமாக மட்டுமல்ல, பாதுகாப்பான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. பணவீக்கம், பொருளாதார நிச்சயமற்ற தன்மை போன்ற காலங்களில் செல்வத்தை பாதுகாக்க தங்கமே சிறந்த கருவி என்ற நம்பிக்கை இந்தியர்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது. அதனாலேயே பெரும்பாலான குடும்பங்களில் தங்கம் முக்கிய சேமிப்பாக வைக்கப்படுகிறது. உலக அளவிலும் தங்கம் ஒரு மூலதன சேமிப்பு உலோகமாக கருதப்படுவதால், சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் நேரடியாக அதன் விலையை பாதிக்கின்றன.
இந்தச் சூழலில், அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்துக்கும் அந்நாட்டின் பெடரல் வங்கிக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே அரிதாக, பெடரல் வங்கி தலைவர் ஜெரோம் பவலுக்கு எதிராக குற்றவியல் விசாரணையை டிரம்ப் நிர்வாகம் தொடங்கியுள்ளது. பெடரல் வங்கி கட்டிடப் புதுப்பிப்பு பணிகளில் முறைகேடு நடந்ததாக கூறி, அமெரிக்க நீதித்துறை பவலுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்காவில் பெரும் அரசியல் மற்றும் நிதி விவாதங்களை உருவாக்கியுள்ளது.
இதற்கு பதிலளித்த ஜெரோம் பவல், தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார். வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என்ற அதிபர் டொனால்ட் டிரம்பின் அழுத்தத்தை ஏற்க மறுத்ததாலேயே, பழிவாங்கும் நோக்கில் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பெடரல் வங்கியின் சுதந்திரத்தை சீர்குலைக்கும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. 1980களுக்குப் பிறகு, அமெரிக்க பெடரல் வங்கி கவர்னருக்கும் ஆளும் அரசுக்கும் இடையே இத்தகைய தீவிர மோதல் ஏற்படுவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
இதன் விளைவாக, அமெரிக்க பொருளாதாரத்திலும் உலக சந்தைகளிலும் நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளது. பொதுவாக இதுபோன்ற சூழல்கள் உருவானால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துகளாக கருதப்படும் தங்கத்தை நோக்கி திரும்புவார்கள். அதன் காரணமாகவே தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது.
இதற்கு மேலாக, புவிசார் அரசியல் பதற்றங்களும் தங்கம் விலைக்கு ஆதரவாக செயல்படுகின்றன. வெனிசுலாவில் திடீர் நடவடிக்கை, ரஷ்யக் கப்பல் தொடர்பான உத்தரவு, கிரீன்லாந்து மற்றும் கொலம்பியா உள்ளிட்ட பகுதிகளில் ராணுவ நடவடிக்கை குறித்து டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவது போன்ற தகவல்கள் உலகளவில் கவலைகளை அதிகரித்துள்ளன. குறிப்பாக ஈரானில் அமெரிக்க ராணுவம் களமிறங்கும் வாய்ப்பு இருப்பதாக வெளியாகும் தகவல்கள், சர்வதேச அரசியல் சூழலை மேலும் பதற்றமாக்கியுள்ளது.
இந்த அனைத்து காரணங்களையும் கருத்தில் கொண்டு, வரும் நாட்களில் உலகளவில் நிச்சயமற்ற தன்மை நீடிக்கும் என்றும், அதன் நேரடி விளைவாக தங்கம் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு அதிகம் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எதிர்பாராத திசையில் டிரம்ப் நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், தங்கத்தை மீண்டும் பாதுகாப்பான முதலீட்டு சொத்தாக முன்னிலைப்படுத்தி, விலையை உச்சத்திற்குத் தள்ளக்கூடும் என்றே சந்தை பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.
English Summary
Is America shaking its foundations The Trump administration actions risk sending gold prices to record highs worldwide