'உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளமை அதீத செயல்பாடு'; 'ஜன நாயகன்' திரைப்பட நிறுவன மேல்முறையீட்டு மனு தள்ளுபடி..!
The Supreme Court dismissed the appeal petition of Jana Nayagan film company
நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 09 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதற்கு தாமதமானதால் படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 'ஜனநாயகன்' படத்திற்கு உடனடியாக தனிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்று சென்சார் போர்டுக்கு உத்தர விட்டார். இதையடுத்து தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக உடனடியாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேல் முறையீட்டு மனுவை பரிசீலனை செய்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, 'ஜனநாயகன்' படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பிறப்பித்த தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தர விட்டதோடு, வழக்கை வரும் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதோடு, இருதரப்பும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பட தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. மத்திய அத்தனிக்கை வாரியம் சார்பில் கேவியட் மனுவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் மேற்கொண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கில், பட நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, 'ஜனநாயகன்' படத்தின் வெளியீடு ஒன்பதாம் தேதி என எங்களது தரப்பில் முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 5000 திரையரங்குகளில் படத்தை திரையிட ஏற்பாடுகளை செய்து விட்டோம். ஆனால், கடைசி நேரத்தில் திரைப்படத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இருக்கும் காட்சிகளை நீக்கினால் தான் தணிக்கை சான்றிதழ் வழங்க முடியும் என்று சென்சார் போர்டு திட்டவட்டமாக தெரிவித்தது. இதனால் படம் வெளியாவதில் சிக்கல் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தனது வாதத்தை முன்வைத்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ''ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தை பொருத்தமட்டில் நீங்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளது என்பது அதீத செயல்பாடாகும் என்று கூறியுள்ளனர். குறிப்பாக இதுதொடர்பான வழக்கின் விசாரணை வரும் 21ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், இத்தனை அவசரம் ஏன் என்பது புரியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அத்துடன், கடந்த டிசம்பர் மாதம் 06-ஆம் தேதி 'ஜன நாயகன்' படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என திரைப்பட தணிக்கை வாரியம் தெரிவித்தது. ஆனால், அதனை நீங்கள் ஏன் எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவில்லை என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனால், இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்றும், நீங்கள் உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் அமர்வின் முன்னிலையில் முறையிடுங்கள் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி; 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இருப்பது என்பது முற்றிலும் அரசியல் ரீதியானதாக இருக்கிறது என்றும், குறிப்பிட்ட தேதியில் திரைப்படம் வெளியிடப்படவில்லை என்றால் அது பெரும் பாதிப்புகளையும் நஷ்டத்தையும் ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள், ''இந்த விவகாரத்தில் உங்களது கோரிக்கை மற்றும் வாதங்களை ஏற்க முடியாது. பட நிறுவன தரப்பில் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்'' என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும் வரும் 20-ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும். அப்போது, உங்களது கோரிக்கையை முறையீடாக வைக்கலாம் என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
The Supreme Court dismissed the appeal petition of Jana Nayagan film company