மனிதத் தன்மையற்ற துயரம் - ஈரான் போராட்ட பலி எண்ணிக்கையை ஒப்புக்கொண்ட காமேனி...!
inhumane tragedy Khamenei acknowledges death toll Iranian protests
ஈரானில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில், இதுவரை காணாத அளவுக்கு தீவிரமான மக்கள் கிளர்ச்சி வெடித்தது. கட்டுக்கடங்கிய பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விண்ணைத் தொட்ட விலைவாசி, நீண்டகால பொருளாதார தேக்கநிலை ஆகியவை பொதுமக்களின் பொறுமையைச் சோதித்தன. இதனுடன் குடிநீர் மற்றும் மின்சார பற்றாக்குறை, வேலைவாய்ப்பின்மை போன்ற அடிப்படை பிரச்சினைகள் சேர்ந்து, மக்களின் கொதிக்கும் கோபம் வெடித்தது.

இந்த அதிருப்தியின் வெளிப்பாடாக, டிசம்பர் 28-ம் தேதி தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் காட்டுத்தீ போல பரவி, 30-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் உள்ள 100-க்கும் அதிகமான நகரங்களை உலுக்கியது.
நிலைமையை கட்டுப்படுத்த அரசு உடனடியாக பாதுகாப்புப் படைகளை களமிறக்கி, போராட்டக்காரர்களை அடக்க நடவடிக்கை எடுத்தது. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.வன்முறையை கட்டுப்படுத்தும் பெயரில், நாட்டின் பல பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கப்பட்டன.
அரசு கட்டுப்பாட்டில் உள்ள சில ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டன. இந்த கடுமையான நடவடிக்கைகளின் விளைவாக, அரசுக்கு எதிராக குரல் கொடுத்தவர்களில் 3,500-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் நார்வேயை தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.பின்னர், அரசின் கடும் கட்டுப்பாடுகளால் நிலைமை மெதுவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கியது. இந்நிலையில், ஈரானின் உச்சபட்ச தலைவர் அயோதுல்லா அலி காமேனி, அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்பதை அரிதாக ஒப்புக்கொண்டார்.
தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், டிசம்பர் இறுதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அரசியல் குழப்பம் மற்றும் அமைதியற்ற சூழ்நிலை ஆகியவை ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளுக்கு வழிவகுத்ததாக தெரிவித்தார்.
இதனை மனிதத் தன்மையற்ற துயரமான சம்பவம் என குறிப்பிட்ட அவர், இதற்கான பொறுப்பை ஈரானிய பாதுகாப்புப் படையினரிடம் சுமத்தாமல், அமெரிக்கா மற்றும் பிற வெளிநாட்டு சக்திகளின் தலையீடே இந்த கலவரங்களுக்கு காரணம் என குற்றம்சாட்டினார்.
மேலும், போராட்டக்காரர்களை முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தூண்டிவிட்டதாகவும், வெளிநாட்டு சக்திகள் ஈரானின் உள்நாட்டு அமைதியை சீர்குலைக்க முயன்றதாகவும் காமேனி குற்றம் சாட்டினார். அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.
ஈரானின் உச்சத் தலைவராக இருக்கும் காமேனி, இத்தகைய விவகாரங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு பேசுவது அரிதான ஒன்றாக இருந்தாலும், உலக நாடுகளின் கவனத்தை திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு அந்த மக்கள் போராட்டங்கள் ஈரானை உலுக்கியது.
English Summary
inhumane tragedy Khamenei acknowledges death toll Iranian protests