இந்தியர் உள்பட 8 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்! இந்தோனேசியாவில் தீவிர தேடுதல்!
Indonesia missing helicopter carrying 8 passengers
இந்தோனேசியாவின் வனப்பகுதியில், இந்தியர் உள்பட 8 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயமான நிலையில் தீவிரமாக தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தெற்கு கலிமண்டன் மாகாணத்தின் கொடாபாரு விமான நிலையத்தில் இருந்து, மத்திய கலிமண்டனை நோக்கி ஹெலிகாப்டர் நேற்று (செப்.1) புறப்பட்டது. ஆனால் புறப்பட்டு 8 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன்பின் ஹெலிகாப்டரின் தடம் காணாமல் போனது.
மாயமான ஹெலிகாப்டரில் இந்தியர் ஒருவருடன், அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் உள்பட மொத்தம் 3 வெளிநாட்டவர்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றவர்கள் இந்தோனேசியப் பிரஜைகள் எனவும் கூறப்படுகிறது.
தற்போது, தனாபும்பூ மாவட்டத்தின் மண்டேவே பகுதியில் உள்ள 27 கி.மீ. நீளமான வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணியில் இந்தோனேசிய காவல்துறை, ராணுவத்தினர் உள்ளிட்ட 140 வீரர்கள், உள்ளூர் மக்களுடன் இணைந்து செயல்படுகின்றனர்.
மேலும், மாயமான ஹெலிகாப்டர் ஈஸ்ட் இந்தோ ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமானது. நிலப் படையினர் மட்டுமன்றி, மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்தி தீவிரமாக தேடிவருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
Indonesia missing helicopter carrying 8 passengers