வயிற்று வலி, மலச்சிக்கல்… ! - குடற்புழுக்களை தவிர்ப்பது எப்படி...?
Stomach ache constipation How avoid worm
அசுத்தமான குடிநீர், சுத்தமற்ற உணவு, போதிய கழிப்பறை வசதியின்மை மற்றும் கைகளை சரியாக கழுவாத பழக்கம் போன்ற காரணங்களால் குடற்புழுக்கள் எளிதில் உருவாகின்றன.
மண், மாசடைந்த நீர் மற்றும் உணவுகளில் இருக்கும் புழுக்களின் முட்டைகள் உடலுக்குள் நுழைந்து குடலில் தங்கி வளரத் தொடங்குகின்றன. இவ்வகை புழுக்கள் பொதுவாக ‘இரைப்பை புழுக்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

வயிற்றில் புழுக்கள் இருந்தால் வயிற்றுவலி, குமட்டல், வாந்தி, மலச்சிக்கல், பசியின்மை, உடல் எடை குறைவு, ஆசனவாயில் அரிப்பு, தூக்கமின்மை போன்ற பல்வேறு அசௌகரியங்கள் தோன்றக்கூடும்.
குழந்தைகளுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கூடுதல் கவனம் அவசியம்.இதனைத் தடுப்பதற்கு தினசரி சுகாதாரம் மிக முக்கியம். சாப்பிடும் முன்பும், கழிவறைக்கு சென்ற பின்பும் கைகளை சோப்புடன் நன்றாக கழுவ வேண்டும். நகங்களை குறுக்காக வெட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பல் துலக்கும் முன் மற்றும் பின் துலக்கியை சுத்தம் செய்வதும் அவசியம். டவல்கள், படுக்கை விரிப்புகள் போன்றவற்றை சூடான நீரில் அடிக்கடி கழுவ வேண்டும். குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள், சமையலறை மற்றும் கழிவறை பகுதிகள் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும்.
மேலும், பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்றாக கழுவி மட்டுமே உணவில் சேர்க்க வேண்டும். செல்லப்பிராணிகளுக்கு தேவையான தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். அவற்றின் கழிவுகள் இருக்கும் இடங்களில் குழந்தைகளை விளையாட விடக் கூடாது.
சுகாதாரம் குறைந்த இடங்களில் இருந்து உணவுப் பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அசுத்தமான பகுதிகளில் காலணியின்றி நடப்பதும் ஆபத்தானது.சிறிய சுத்தம்… பெரிய பாதுகாப்பு – குடற்புழுக்கள் வராமல் தடுக்க இதை பழக்கமாக்குவோம்.
English Summary
Stomach ache constipation How avoid worm