'இந்தியா கோவில் போன்றது; எனது விதி பகவான் ஸ்ரீ ராமரின் கைகளில் உள்ளது': பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் உருக்கம்..!
India is like my temple says former Pakistani cricketer Danish Kaneria
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹிந்து மதத்தைச் சேர்ந்த வீரர் டேனிஷ் கனேரியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் தன்னிடம் பாகுபாடு காட்டியதாகவும், தன்னை மதமாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும், அண்மை காலமாக குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார்.
இந்நிலையில், அவர், 'பாகிஸ்தான் எனது ஜென்மபூமியாக இருக்கலாம். ஆனால், எனது முன்னோர் வாழ்ந்த இந்தியா எனக்கு கோவில் போன்றது,' என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு ஆதரவான கருத்துக்களை கூறி வரும் கனேரியா, இந்திய குடியுரிமை பெற முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், 'இந்தியா தன்னுடைய முன்னோர் வாழ்ந்த மண், இந்தியா எனக்கு கோவில் போன்றது' என்று கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

'ஏன் நீங்கள் பாகிஸ்தானைப் பற்றி பேசுவதில்லை, இந்தியாவின் உள்விவகாரங்களை பற்றியே பேசி வருகிறீர்கள் என்று சிலர் என்னிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். இவை அனைத்தும் இந்திய குடியுரிமை பெறுவதற்காகவே நான் இதுபோன்று செய்வதாக குற்றம்சாட்டியிருந்தனர்.
பாகிஸ்தான் மக்களிடம் இருந்து நான் நிறைய அன்பை பெற்றுள்ளேன். அதேவேளையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் என்னிடம் பாகுபாடு காட்டினார்கள். என்னை மதம் மாறச் சொல்லி கட்டாயமும் செய்தனர்.
இந்திய குடியுரிமை பெறும் விவகாரத்தில் நான் மிகவும் தெளிவாக உள்ளேன். பாகிஸ்தான் எனது ஜென்மபூமியாக இருக்கலாம். ஆனால், எனது முன்னோர்களின் பூமியான இந்தியா எனது தாய்நாடு. இந்தியா எனக்கு கோவில் போன்றது. இதுவரையில் இந்திய குடியுரிமை பெறுவது தொடர்பாக என்னிடம் எந்த திட்டமும் இல்லை. எதிர்காலத்தில் என்னை போன்றவர்கள் இந்திய குடியுரிமை பெற விரும்பினால், சிஏஏ ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது.
எனவே, என்னுடைய செயல்பாடுகள் இந்திய குடியுரிமை பெறுவதற்காக என்று கூறுவது தவறானது. நான் தர்மத்திற்காக தொடர்ந்து நிற்பேன். நமது சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிக்கும் தேசவிரோதிகள் மற்றும் போலி மதச்சார்பற்றவர்களை அம்பலப்படுத்துவேன். எனது பாதுகாப்பில் அக்கறை கொண்டவர்களுக்கு, ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதத்துடன், நான் என் குடும்பத்துடன் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் என்று கூறுகிறேன். எனது விதி பகவான் ஸ்ரீ ராமரின் கைகளில் உள்ளது'. என்று அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

English Summary
India is like my temple says former Pakistani cricketer Danish Kaneria