'திமுகவை பிடிக்காது என்று சொல்வது, ஒடுக்கப்பட்டவர்கள் படிப்பது பிடிக்காது என்று பொருள்'; முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!
Chief Minister Stalin said that saying that one does not like DMK means that the oppressed do not like education
சுயமரியாதை இயக்க நுற்றாண்டு நிறைவு விழா செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் இன்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கியதோடு, இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இதில் பேசிய போது முதல்வர் குறிப்பிட்டுள்ளதாவது: சுயமரியாதை திருமணத்தை அண்ணாதுரை சட்டமாக்கினார். கருணாநிதி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் அங்கீகாரம் வழங்கினார். அதன் நீட்சியாகத்தான் சமூகநீதிக்கான இடஒதுக்கீடு, மகளிர் முன்னேற்றத்திற்கான திட்டங்களை செய்து கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இன்று தமிழ் சமூகம் சிந்தனை ரீதியாக முன்னோக்கி செல்ல திராவிட மாடல் அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துள்ளதாகவும், ஜாதிப் பெயரில் இருந்த விடுதிகளை சமூக நீதி விடுதிகளாக மாற்றியுள்ளோம் என்றும், ஜாதிப் பெயர்களின் இறுதி எழுத்து 'ர்' என்று முடியும் வகையில் மாற்றம் செய்து, மக்களுக்கு உரிய மரியாதை கிடைக்கச் செய்ய பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், வேற்றுமை, பகைமையையும் விரட்ட சமூக நீதி, சமத்துவம், கல்வி, அதிகார உரிமை ஆகியவை வேண்டும் என்பதற்காக அதனை உருவாக்க பாடுபடுகிறேன் என்றும் பேசியுள்ளார்.
பவள விழா, நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார்கள். ஆனால், இங்கு எதுவும் மாறவில்லையே என்று சிலர் கேட்கிறார்கள். இது அக்கறை இல்லை, ஆணவம் என்று கூறியுள்ளதோடு, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாங்கள் உருவாக்கிய கட்டமைப்பை உங்களால் உடைக்க முடியவில்லை என்ற சவால் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இந்த 100 ஆண்டுகளில் மாற்றத்திற்கான விதைகளை நாம் விதைத்துள்ளோம் என்றும், இங்கு எதுவுமே மாறக் கூடாது என்று நினைப்பவர்கள் சதித்திட்டம் போடுவதை நாட்டில் நடக்கும் செய்திகளை உற்று பாருங்கள் என்றும், தமிழகம் ஏன் தனித்து உயர்ந்து நிற்கிறது என்று புரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிலர் திமுகவை பிடிக்காது என்பார்கள். அது ஒடுக்கப்பட்டவர்கள் படிப்பது பிடிக்காது என்று தான் பொருள் என்றும், எல்லோரும் கோவிலுக்குள் செல்வது பிடிக்காது என்றும், தமிழ் பிடிக்காது, தமிழர்கள் பிடிக்காது. நாம் தலைநிமிர்ந்து நடப்பது பிடிக்காது, நம் மக்களுக்கு கிடைத்திருப்பதை வேகவேகமாக பறிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அறிவியலை பின்னுக்கு தள்ளி பிற்போக்குதனத்தையும், ஆதிக்கத்தையும் நிலைநிறுத்த சூழ்ச்சி நடக்கிறதாகவும், தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவையே ஒரு நூற்றாண்டுக்கு பின்னோக்கித் தள்ள நுணுக்கமான சூழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது என்றும், இதனை எல்லாம் தடுத்து நிறுத்துவது தான் இந்த திராவிட மாடல் என்று சூளுரைத்துள்ளார்.
மேலும், அடுத்து திராவிட மாடல் 2.O என்று சொல்வோம். 2026-இல் நடப்பது அரசியல் தேர்தல் கிடையாது எனவும், தமிழினம் தன்னை காத்துக் கொள்ளக் கூடிய சமுதாய தேர்தல் என்றும், கொள்கையற்ற அதிமுகவால் 10 ஆண்டுகள் பாழாய் போன தமிழகத்தை, மக்களின் ஆதரவோடு மீட்டெடுத்து, இந்த 04 ஆண்டுகளில் வளப்படுத்தியிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், திராவிடத்திற்கு எதிரான பாஜவும், திராவிடம் என்றாலே என்னவென்று தெரியாத இபிஎஸ்ஸின் அதிமுகவும் மீண்டும் கபளிகரம் செய்ய பார்க்கிறார்கள் என்றும், தமிழகத்தை நாசப்படுத்தும் கூட்டத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என்று விமர்சித்து பேசியுள்ளார்.
English Summary
Chief Minister Stalin said that saying that one does not like DMK means that the oppressed do not like education