தெருநாய்கள் அட்டகாசம் அதிகரிப்பு...! திருப்பூரில் சிறுமியை விரட்டி கடித்த சம்பவம் பரபரப்பு...!
Menace Stray Dogs Rise Incident Girl Being Chased and Bitten Tiruppur Sparks Alarm
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. குறிப்பாக வீதிகளில் விளையாடும் குழந்தைகள் மற்றும் தனியாக செல்லும் முதியவர்களை விரட்டி தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், குடியிருப்பு பகுதிகளில் பாதுகாப்பு குறித்த கவலை பெருகியுள்ளது.

அதிலும் திருப்பூர் வி.ஜி.வி. குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தெருநாய்கள் கூட்டமாக சுற்றித் திரிவதால் அங்குள்ள மக்கள் பதற்றத்தில் வாழ்ந்து வருகின்றனர். குழந்தைகள் வெளியில் விளையாட கூட பெற்றோர்கள் அஞ்சும் சூழல் உருவாகியுள்ளது; முதியவர்களும் தனியாக வெளியே செல்ல தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை வி.ஜி.வி. குடியிருப்பு 10-வது வீதியில் வீட்டின் முன்பு சென்றுக் கொண்டிருந்த ஒரு சிறுமியை அங்கிருந்த தெருநாய் திடீரென விரட்டி தாக்கி கடித்தது. இந்த தாக்குதலில் சிறுமிக்கு இரண்டு இடங்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
அவளின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்து சிறுமியை மீட்டு உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் அதே நாய் அந்த ஒரே நாளில் அந்தப் பகுதியில் மேலும் பலரை கடித்து காயப்படுத்தியதாக குடியிருப்பவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தெருநாய்களின் அதிகரித்த தொல்லையுடன் சேர்ந்து, சிலர் வளர்க்கும் செல்லப்பிராணிகளையும் போதிய கட்டுப்பாடின்றி பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் விடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
வெறிநாய்கள் மற்றும் ஆக்ரோஷமாக சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், சிறுமியை தெருநாய் விரட்டி தாக்கும் காட்சி அருகிலிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Menace Stray Dogs Rise Incident Girl Being Chased and Bitten Tiruppur Sparks Alarm