அதிரடி பிரசாரம்...! தென்காசியில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம்...! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்தது தமிழக அரசியலில் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் என்ற அடையாளத்தால் அவருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முக்கிய பங்குகளை ஒப்படைத்து வருகிறார்.

வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தென் மாவட்டங்களில் கட்சியின் ஆதரவை வலுப்படுத்தும் வகையில் ஓ.பன்னீர்செல்வத்தை சுற்றுப்பயணத்திற்கு அனுப்பி தேர்தல் பணிகளை முன்னெடுக்க மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, தனது தேர்தல் பயணத்தை ஓ.பி.எஸ். இன்று தென்காசி மாவட்டத்தில் இருந்து தொடங்கியுள்ளார்.இதன் ஒரு பகுதியாக, குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க. நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இந்த கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பல நிர்வாகிகள் கலந்து கொண்டு தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து கலந்துரையாடினர்.

மேலும், இன்று மாலை 4 மணிக்கு கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அச்சன்புதூர் சேனைத்தலைவர் சமுதாய மண்டபத்திலும், இரவு 7 மணிக்கு சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியிலும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த உள்ளார்.

அதனைத் தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) காலை வாசுதேவநல்லூர் தொகுதியில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ள அவர், பின்னர் ராமநாதபுரம் மாவட்டத்தின் முதுகுளத்தூர், பரமகுடி, திருவாடானை உள்ளிட்ட பகுதிகளிலும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.

தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூகத்தின் வாக்குகள் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், அந்த வாக்கு வங்கியை தி.மு.க.விற்கு திரட்டும் நோக்கில் ஓ.பி.எஸ். களமிறக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் கூறுகையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்த பின்னர் தென் மாவட்ட அரசியலில் புதிய மாற்றங்கள் உருவாகியுள்ளன. கள்ளர் மற்றும் மறவர் சமூக தலைவர்களை நேரில் சந்தித்து பேசும் திட்டத்துடன் அவர் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

மேலும் அடுத்த ஒரு வாரம் மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் விரிவான சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியின் ஆதரவை வலுப்படுத்த உள்ளார் என்று தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

High Octane Campaign O Panneerselvam Launches Election Campaign from Tenkasi


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->